"துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை, ஏப்ரல் மாதத்துக்குள் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2004ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்வழிக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், ஒவ்வொரு ஒன்றியத்திலும், குறிப்பிட்ட சில பள்ளிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, 2007ம் ஆண்டு முதல், அனைத்து துவக்க, நடுநிலைப் பள்ளிகளிலும், செயல்வழிக் கற்றல் முறை, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் முறை பின்பற்றப்படுகிறது. இம்முறையின் கீழ், மாணவர்கள், தாங்களாகவே முன்வந்து பாடம் கற்க வேண்டும். தேர்வு, புத்தகம் எதுவும் இல்லை. புத்தகப் படிப்பு இல்லாததால், மாணவர்களது வாசிப்புத் திறன் படிப்படியாக குறையத் துவங்கியது. இந்நிலையில், சென்ற ஜனவரி மாதம் தொடக்க கல்வித் துறை இணை இயக்குனர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வல்லம் ஒன்றியத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன், வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து, மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிக்கப்படுத்த, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏப்ரல் மாதத்திற்குள், மாணவர்களது வாசிப்புத் திறன் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், வகுப்பு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடக்க கல்வித் துறை இணை இயக்குனர் உத்தரவையடுத்து, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள், துவக்கப் பள்ளிகளுக்கு அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து, மாணவர்களது வாசிப்புத் திறன் குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
"செயல்வழிக் கற்றல் முறை நடைமுறையில் உள்ளது. எனினும், 2007ம் ஆண்டு முதல் புத்தகமும் வழங்கப்படுகிறது. அதனால், ஆறு ஆண்டுகளாக துவக்கப் பள்ளியில் இரட்டை வழிக் கற்றல் முறை நடைமுறையில் உள்ளது. இது, துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, செயல்வழிக் கற்றல் முறையில், மாணவர்களுக்கு புத்தகம், தேர்வு கிடையாது. பள்ளி ஆசிரியர்களாக பார்த்து, தேர்வு நடத்திக் கொள்ளலாம். குறைந்த மதிப்பெண் பெற்றாலும், அடுத்தடுத்த வகுப்புக்கு மாணவர்கள் அனுப்பப்படுவர். புத்தகம், தேர்வு இல்லாததால், மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் வெகுவாக குறைந்தது. அதனால், ஐந்தாம் வகுப்பு பின், உயர்நிலை வகுப்பு செல்லும் மாணவர்கள், பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. இச்சூழலில், வரும் ஏப்ரல் மாதத்திற்குள், மாணவர்களது வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டும் என, தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் லதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாசிப்புத்திறன் மேம்படுத்தாத வகுப்பு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உத்தரவையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வருகின்றனர். அப்போது, எந்த முறையை வேண்டுமானாலும் பின்பற்றி, மாணவர்களது வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டும் என, தெரிவிக்கின்றனர். இணை இயக்குனர், செயல்வழிக் கற்றல் முறையை பின்பற்றி, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டுமென உத்தரவிடுகிறார். ஆனால், மாவட்ட அதிகாரிகளோ, எந்த முறையை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்கின்றனர். இந்த உத்தரவுகள், துவக்கப் ஆசிரியர்களை குழப்பமடையச் செய்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment