இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 30, 2018

ஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்கு ஒருநபர் குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளையும், ஊழியர்களையும் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை வழங்க உள்ளது. இந்தக் குழுவின் சார்பில் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி விலிங்டன் கல்லுôரி வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்பட கருத்துத் தெரிவிக்க விண்ணப்பித்த பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டமைப்பின் சார்பில் இருவர் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு


பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில், தினமும் ஏதாவது ஒரு கலவை சாதம், முட்டை, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் தரம் குறித்து, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அரசு முடிவு : இந்நிலையில், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில், கண்காணிப்பு குழுக்களை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட குழுவுக்கு, கலெக்டர் தலைவராக இருப்பார்.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மருத்துவத் துறை இணை இயக்குனர், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர், சமூகநல அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட, 12 பேர், உறுப்பினர் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

ஒன்றிய அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், குழந்தை நல வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உட்பட, ஏழு பேர் குழுவில் இடம் பெறுவர்.

ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா?


ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டி, இன்று அறிக்கை தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில், ஜனவரி மாதம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியபோது, 'கடுமையான நிதி நிலை நிலவி வரும் போதும், அரசு பணியாளர் ஊதிய திருத்தங்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

'அவற்றை பரிசீலிக்க, அரசு, ஒரு குழுவை அமைக்கும்' என, அறிவித்தார். அதன்படி, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினம் துறை செயலர், சித்திக் தலைமையில், பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. 'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டிருந்தது.

எனவே, இன்று கமிட்டி சார்பில், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

TNPSC GROUP IV result


http://results.tnpsc.gov.in/

Sunday, July 29, 2018

கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு


அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க, ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, புதிய கல்வித் தகுதிக்கான கோப்பை தயாரித்து, அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளனர்.தற்போதைய நிலையில், கணினி அறிவியல் பாடம் நடத்த, இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்கள் என்ற பதவியில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுக்க வேண்டியுள்ளது.பள்ளிக்கல்வி விதிகளின்படி, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.

எனவே, இந்த விதிகளின்படி, கணினி அறிவியல் பாட ஆசிரியர் பதவிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமனம் செய்ய, விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

Saturday, July 28, 2018

மாணவ-மாணவியர் பள்ளிகளுக்கு நகை அணிந்து வர தடை மொபைல் போனுக்கும் அனுமதி இல்லை


பள்ளி மாணவர்கள், மொபைல் போன் எடுத்து வரவும், நகைகள் அணிந்து வரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு, பல்வேறு அறிவுரைகள் அடங்கிய கையேட்டை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்:

பள்ளியில் நடக்கும், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். குழந்தையின் உடல்நலம் குறித்த விபரங்களை, வகுப்பு ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து, அவ்வப்போது, வகுப்பு ஆசிரியரிடம் ஆலோசிக்க வேண்டும்.குழந்தைகளின் நடை மற்றும் பாவனைகளை, பெற்றோர், தினமும் கண்காணிப்பது அவசியம். அதேபோல், பிள்ளைகள், மொபைல் போன், கணினி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவதை முறைப்படுத்தி, கண்காணிக்க வேண்டும்.

தங்கள் குழந்தைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது.மாணவர்கள், பள்ளி உடமைகளை பாதுகாக்க வேண்டும். தேர்வு நாட்களில் விடுமுறைகள் எடுக்கக் கூடாது. நீண்ட விடுப்பு எடுக்க, மருத்துவ சான்றிதழ் அவசியம். பள்ளிக்கு மொபைல் போனை எடுத்து வர அனுமதி இல்லை. விலை உயர்ந்த அணிகலன்களை அணிந்து வரக் கூடாது. கூர்மையான மற்றும் கனமான பொருட்களை பயன்படுத்தி, ஆபத்தான முறையில் விளையாடக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. யோகா கட்டாயம்!பள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

* முற்பகலில், நான்கு பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். மதிய உணவுக்கு முன், யோகா வகுப்பு கட்டாயம்

* எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, 10 நிமிடம்; 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 15 நிமிடமும் யோகா பயிற்சி அவசியம்

* அதேபோல், ஒழுக்கம், சுற்றுச்சூழல், சுகாதார கல்வி தொடர்பான செயல்பாடுகளும், அவசியம் போதிக்கப்பட வேண்டும்

ஊரக திறனாய்வு தேர்வு செப்., 23ல் நடக்கிறது


அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்காலர்ஷிப்' வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23ல் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, ஊரக பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு முடிவு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மேல் படிப்பு உதவி தொகையாக, ஆண்டுதோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும்.ஒவ்வொரு வருவாய் மாவட்டத்துக்கும், தலா, 50, மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்விற்கு, நகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. நடப்பு கல்வி ஆண்டுக்கான, ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23 காலை, 10:00 முதல், பிற்பகல், 12:30 மணி வரை நடைபெறும்.இந்த தேர்வுக்கு, அந்தந்த பள்ளி வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், ௧ லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, வருமான சான்றிதழ் பெற வேண்டும். இந்த தேர்வுக்கு, சேவை கட்டணத்துடன், 10 ரூபாய் கட்டணத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் தர வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Friday, July 27, 2018

சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு


அரசு பள்ளி சிறப்பாசிரியர் பணியிடத்துக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், 1,325 சிறப்பாசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்கு, செப்டம்பர், 23ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், 35 ஆயிரத்து, 781 பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள், ஜூன், 14ல், வெளியிடப்பட்டன.

இதை தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்காக, தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று வெளியிட்டது.தேர்வானவர்களுக்கு, ஆக., 13ல், மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

Thursday, July 26, 2018

தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு


அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்வதால், விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளான, செப்.,5ல், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இதை, தமிழகத்தில், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்ற பெயரில், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குகின்றனர்.இதற்கான விண்ணப்பம், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, நல்லாசிரியர் விருதுக்கு, இன்னும் விண்ணப்பம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தினத்துக்கு, ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், விண்ணப்ப வினியோகம் தாமதம் ஆகியுள்ளது. விருது வழங்குவதற்கான விதிகள், பெரிய அளவில் மாற்றப்படுவதாகவும், அதனால் தான், விண்ணப்ப அறிவிப்பு தாமதம் ஆவதாகவும், தகவல்கள் வெளியாகிஉள்ளன.ஏற்கனவே, தேசிய அளவில் ஆசிரியர் விருதுக்கு, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், நேரடியாக, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், மாநிலங்களுக்கான விருதுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்தில் தனியாக, 'கனவு ஆசிரியர் விருது' அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நல்லாசிரியர் விருதை, பல்வேறு நிபந்தனைகளுடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வெறும் அனுபவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், ஆசிரியர்களின் திறமை, மாணவர்களை உருவாக்கிய விதம், ஒழுக்க நடைமுறைகள், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய விதம் போன்றவற்றையும், ஆய்வு செய்ய உள்ளனர்.ஒவ்வொரு மாவட்டங்களிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் சிபாரிசுகளுக்கு இடம் தராமல், தகுதி அடிப்படையில், விருது வழங்கப்பட உள்ளது.விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை புகுத்துவதுடன், விண்ணப்ப பரிசீலனையில், கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் தலையீடு இன்றி, பட்டியல் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பி.எப்., நிதிக்கான வட்டி 7.6 சதவீதம்


அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பி.எப்., என்ற வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தத் தொகைக்கு ஏப்., 1 முதல் ஜூன் 30 வரை 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.மீண்டும் ஜூலை 1 முதல் செப்., 30 வரை பி.எப்.,புக்கு 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Wednesday, July 25, 2018

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு


அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு கால விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பிளஸ் 1க்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடக்கும் தேதிகள், பள்ளி துவங்கிய நாளே அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகளும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன.நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள் தேதி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளிகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் கையேட்டை அனுப்பியுள்ளார்.

இதில், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு கால அட்டவணைவகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு1 முதல் 8 வரை செப்.17 - 22 டிச.17 - 22 ஏப்., 10 - 189 முதல் பிளஸ் 2 வரை செப்.10 - 22 டிச.10 - 22 ஏப்., 8 - 18தேர்வு விடுமுறை செப்.23-அக்.2 டிச.23 - ஜன.1 ஏப்., 19 - ஜூன் 2

Tuesday, July 24, 2018

ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்


தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும் எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிகளுக்கு, தகுதி தேர்வான, 'டெட்' கட்டாயம் ஆகியுள்ளது.தமிழகத்தில், 2012ல், டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர், பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படித்திருப்பதுடன், கூடுதலாக, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பள்ளி, கல்லுாரி கல்வி சான்றிதழ் அடிப்படையிலான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையால், பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு, வேலை கிடைப்பதில் பிரச்னை இருந்தது.எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய அரசாணை

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு மட்டுமின்றி, கூடுதலாக போட்டி தேர்வும் நடத்தப் படும். போட்டி தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என,
தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த அரசாணையை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார்.அதன் விபரம்:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன் படி, டெட் தேர்வில், தேர்ச்சிபெற்றவர்களையே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.டெட் தேர்வில், அதிக தரம் பெற்றவர்களை, இனவாரி சுழற்சியில், ஆசிரியர் பணிக்கு நியமிக்கும்போது, அதே தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றவர்களும், தங்களுக்கு ஆசிரியர் பணி வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த நிலையை மாற்ற, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல, டெட் தேர்வு என்பதை தகுதி தேர்வாக நடத்தி விட்டு, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, தனியாக போட்டி தேர்வு நடத்தலாம்.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், இந்த தேர்வில் பங்கேற்க நிபந்தனை விதிக்கலாம் என, பொதுப்பள்ளி கல்வி வாரியம் பரிந்துரைத்தது.இந்த பரிந்துரைகளை, அரசு ஆய்வு செய்ததில், சில விபரங்கள் பரிசீலிக்கப் பட்டன.டெட் தேர்வின் தேர்ச்சி என்பது, ஏழு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது என்ற நிலையில், வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி யவர்கள், டெட் தேர்விலா வது அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, மீண்டும் மீண்டும், டெட் தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதனால், தேர்வர் களுக்கு சிரமம் ஏற்படுகிறது.விண்ணப்பதாரர்களின் கல்விசான்றிதழ் அடிப்படையில், வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பின்பற்றுவதால், பல ஆண்டுகளுக்கு முன், அடிப்படை கல்வித் தகுதி பெற்றவர்கள், சமீபத்தில் படித்தவர்களை விட, வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக பெறும், முரண்பாடான நிலை ஏற்படுகிறது.மேலும், ஆண்டுதோறும் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் வேறுபடுவதால், வெயிட்டேஜ் முறையின் படி,தரவரிசை பட்டியல்

தயாரிப்பதில், தேர்வு நடத்தும் அமைப்புக்கும், இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

'வெயிட்டேஜ்' இனி இல்லை

எனவே, ஆந்திரா போன்ற மாநிலங்களில், இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. டெட் தேர்வுடன், போட்டி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.இந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வை தனியாகவும் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

விதிமுறை

போட்டி தேர்வை எழுது வதற்கு விண்ணப்பிப்பவர்கள், டெட் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, விதிமுறைப்படி காலியிடங்களை நிரப்பும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

அரசாணை:148, அரசு உதவி பெறும்.பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவங்க ஆணை


https://drive.google.com/file/d/1gVAFFJbxz_iqB3faxBYKjfYt_7_qmg8K/view?usp=drivesdk

G.O 149-#ஆசிரியர்தகுதித்தேர்வு மற்றும் நியமனத்துக்கான #போட்டித்தேர்வு தனித்தனியாக நடத்தப்படும்: #தமிழகஅரசு


https://drive.google.com/file/d/1oAhLQgpFWFdHs1UwK87IGYE6Uj122DwS/view?usp=drivesdk

Monday, July 23, 2018

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு


பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்தி, அவர்கள் தேர்ச்சி பெற, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் அவர் கூறியதாவது:

மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில், அவர்களுக்கு, இரண்டாவது முறையாக மறு தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்ட திருத்த மசோதா, விரைவில், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

9ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: 40 ஆண்டுகளில் இல்லாத புது முயற்சி


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல, தமிழக பள்ளி கல்வியிலும், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

-மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, 10 வகுப்புக்கும், தொழிற்கல்வி, விருப்ப பாடமாக நடத்தப்படுகிறது.

ஒப்புதல்

இதை பின்பற்றி, தமிழ கத்திலும், இடைநிலை கல்வியில் முதன்முதலாக, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ.,வின் முன்னாள் இயக்குனருமான, ராமேஸ்வர முருகன், இந்த திட்டத்துக்கான கோப்பை தயாரித்து, மாநில அரசிடம் தாக்கல் செய்திருந்தார். அதற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது.

இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், முதற்கட்டமாக, 67 பள்ளிகளில், 9ம்வகுப்பிற்கு மட்டும், தொழிற்கல்வி பாடம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, பள்ளி அளவிலான தேர்வாக அல்லாமல், அரசின் பொது தேர்வுத்துறை வழியாக, தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு பின், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின், மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன் கூறியதாவது:தமிழகத்தில், 1978 - 79ல், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, அவை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அமலுக்கு வந்தன.

வேலை வாய்ப்பு

ஆனால், இடைநிலைமாணவர்களுக்கும், தொழிற்கல்வி துவங்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. அதை நிறைவு செய்யும் வகையில், 9ம் வகுப்பில், தொழிற்கல்வி பாடம் அமலுக்கு வந்துள்ளது.இதில், தானியங்கி ஊர்தி பொறியியல், வீட்டு அலங்காரம் செய்தல், விவசாயம், அழகு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்த நடவடிக்கையால், உயர்கல்விக்கு செல்லாமல், பள்ளிப்படிப்பை மட்டும் முடிக்கும் மாணவர்களுக்கும், தொழில் திறனும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். மத்திய திட்டத்தை பின்பற்ற உத்தரவுதொழிற்கல்வி பாடத்தை, சி.பி.எஸ்.இ.,யை போல, தமிழக மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பின்பற்றும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் பாடத்திட்டப்படி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த மத்திய பாடத்திட்டத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.