தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கணிதக் கற்றல் திறனை மேம்படுத்த, கணித உபகரணங்கள் வழங்கும் பொருட்டு ரூ.1.28 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மரத்தால் செய்யப்பட்ட 31 உபகரணங்கள் உள்ளடக்கிய 9 தொகுப்புகள் வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டான்சி நிறுவனம் வழங்கும் இந்தக் கணித உபகரணங்களை, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய வகையில் வைத்து, இருப்புப் பட்டியலை அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் தெரிவித்து பதிவேடு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த விவரங்களையும் தொடக்கக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.