ரூ.12 கோடி செலவில் 99,329 சத்துணவு மையங்களுக்கு மிக்சி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் ஒரே மாதிரியான உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப 13 வகை கலவை சாதங்கள் மற்றும் 4 வகையான முட்டை மசாலாக்கள் என்ற புதிய உணவு வகைகளை சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தை நல மையங்களில் வழங்கப்படவுள்ளது. புதிய வகை உணவுகள் தரமாகவும், உரிய நேரத்தில் வழங்கவும் ஒவ்வொரு மையத்திற்கும் மிக்சி தேவைப்படுவதால் அனைத்து சத்துணவு மையங்களுக்கும், குழந்தை நல மையங்களுக்கும் பிற உபகரணங்கள் உள்பட மிக்சி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, முதல்கட்டமாக 43,787 சத்துணவு மையங்கள் மற்றும் 9,094 குழந்தைநல மையங்களில் ரூ. 6 கோடியே 56 லட்சத்து 26 ஆயிரம் செலவிலும், இரண்டாம் கட்டமாக 46,448 குழந்தை நலமையங்களில் ரூ.5 கோடியே 76 லட்சத்து 42 ஆயிரம் செலவிலும் என மொத்தம் 99,329 மையங்களுக்கு, தலா ஒரு மிக்சி வீதம் 99,329 மிக்சிகளை மொத்தம் ரூ.12 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் செலவில் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment