வரும், 11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை, கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.கடந்த முதல் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. தமிழ் தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று, ஆங்கிலம் முதற்தாள் தேர்வு நடக்கிறது. நாளை, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.கணிதம், அறிவியல் பாடங்களில், மாணவர் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கை நடத்தப்படுகிறது.
எனவே, இந்த பாடங்கள் மட்டும், "டம்மி' பதிவு எண்களைக் கொண்டு, தேர்வு நடத்தப்படுகிறது. இந்த முக்கிய தேர்வுகள், வரும் 11ம் தேதி முதல், நடக்கின்றன.இயற்பியல் தேர்வு, 11ம் தேதி நடக்கிறது. 14ம் தேதி, கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி, வேதியியல் தேர்வும், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வும் நடக்கின்றன. 25ம் தேதி, "பயோ-கெமிஸ்ட்ரி' தேர்வு நடக்கிறது. இதுபோன்ற தேர்வுகளை, வழக்கமாக, இணை இயக்குனர்கள், நேரடியாக கண்காணிப்பர்.இந்த ஆண்டு, கல்வித்துறை இயக்குனர்களும், நேரடியாக சென்று, முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்த உத்தரவை, அமைச்சர் பிறப்பித்தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, கல்வித்துறை இயக்குனர்கள் அனைவரும், முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க, பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.
No comments:
Post a Comment