""அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்காக, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பொங்கலுக்கு முன்னதாக துவக்கி, ஏப்ரலில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
நடப்பு கல்வியாண்டு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 1 முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, 3ம் பருவ பாடப் புத்தகங்கள், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, ஜன., 2ம் தேதி, பள்ளிகள் திறந்ததும் வழங்குவதற்கு, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு : அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவசமாக வழங்குவதற்காக, 2.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, அடுத்த கல்வியாண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான பணியை, பாடநூல் கழகம் துவக்கி உள்ளது.
இது குறித்து, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர், கோபால் கூறியதாவது: தற்போது, மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியில், தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரை, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் தேவை. தற்போது, 12 சதவீத புத்தகங்கள், இருப்பு இருக்கின்றன. மீதமுள்ள புத்தகங்கள் அச்சிடும் பணி, பொங்கலுக்கு முன், துவங்கும். 140 அச்சகங்களில், இந்தப் பணிகள் நடக்கும். அடுத்த ஆண்டு, ஏப்ரலில், அச்சடிப்பு பணியை முடித்து, மே மாதம், பள்ளிகளுக்கு அனுப்ப, திட்டமிட்டுள்ளோம்.
ஜூன் மாதம், பள்ளிகள் திறந்ததும், மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள் கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டுஉள்ளார். அதன்படி, பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு, 9ம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலுக்கு வருகிறது. இதற்கு, பாட வாரியாக, "சிடி'க்கள், வந்து கொண்டிருக்கின்றன. பருவத்திற்கு இரண்டு : ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, ஒவ்வொரு பருவத்திற்கும், இரண்டு புத்தகங்களாக வழங்குகிறோம். 9ம் வகுப்பிற்கு, பாடத் திட்டங்கள் அதிகம் இருக்கும் என்பதால், மூன்று புத்தகங்களாக வழங்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். புத்தகங்களின் விலையில், எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு கோபால் தெரிவித்தார்.
6ம் வகுப்பிற்கு மட்டும் தான்...: நடப்பு கல்வியாண்டில், 6 முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 80 பக்கங்கள் கொண்ட, அட்லஸ் புத்தகங்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன. பல்வேறு தகவல் புதையல் கொண்ட இந்த புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில், தரமானதாக, பாடநூல்கழகம் உருவாக்கி உள்ளது. நடப்பாண்டில், அட் லஸ் பெறும் மாணவ, மாணவியருக்கு, அடுத்த ஆண்டு, மீண்டும் வழங்கப்பட மாட்டாது. அடுத்த ஆண்டில் இருந்து, 6ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும், இலவச அட்லஸ் வழங்கப்படும் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment