பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தை கட்டாயம் பெற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது விதிமுறைகள் பின்பற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில், சமீபத்தில் கல்விச் சுற்றுலாவின்போது அதிகரித்து வரும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், மாநில அரசுகள், தகுந்த விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டது.
தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைக்கான தொகுப்புகளை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், கலைத் திட்டத்துடன் இருப்பதை உறுதிசெய்தல்; மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் அவர்கள் சார்ந்த அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளுதல் அவசியம். பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற மாணவர்கள் மட்டுமே கல்விச் சுற்றுலாவில் பங்கேற்க இயலும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.
பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், சுற்றுலாவில் பங்கேற்கும்போது, உள்ளூர் சுற்றுலா முகவரின் துணையை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள், ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே இருக்கவேண்டியது அவசியம். மாணவர்களின் ஒப்புதல் கடிதம் மற்றும் உடன் செல்லும் ஆசிரியர்களிடம் மாணவர்களின் அவசர பாதுகாப்பு நடவடிக்கையில் உதவுவோம் என்ற ஒப்புதல் கடிதமும் பெற வேண்டும். கோவை மாவட்ட பள்ளிகளுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை தொடக்க கல்வி அலுவலகத்தின் கீழ், அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை பின்பற்றாமல் கல்விச் சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment