இந்திய மக்கள் கேள்விப்படாத வார்த்தை சுனாமி. 2004 டிச., 26ம் தேதி, "கடல் அலை' கோபம் கொண்டு ஊருக்குள் வந்த போது தான் தெரிந்தது, அது தான் சுனாமி என்று. இதன் கோபமோ வெறும் பத்து நிமிடம் தான். அது ஏற்படுத்திய சோகம், மக்கள் மனதில் இருந்து என்றுமே அழியப் போவதில்லை. சமீபத்தில் கூட, அதே சுமத்ரா தீவில் பூகம்பம் ஏற்பட்டு, தமிழகத்தின் பல நகரங்களில் அதிர்வு உணரப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 42 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, வாபஸ் பெறப்பட்டது. தற்போது சுனாமி என்றாலே குலைநடுங்கும் நிலை வந்துவிட்டது.
சுனாமி என்பது ஜப்பானிய மொழிச் சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்திய துணைக்கண்டத்தில் மட்டும், 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் இறந்தனர். இது, உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம் என்ற சோகமான சாதனையைப் பெற்றது.
தமிழகம் அதிகம் : இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரம் பேர் பலியாக, தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். பூகம்பம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப் பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன. மலைப்பகுதியில் ஏற்படும்போது எரிமலை உருவாகிறது. இதுவே கடலில் ஏற்படும் போது, சுனாமி உருவாகிறது. இன்னும் வேகம்: ஆழிப் பேரலையின் வேகம் ஆரம்பித்த இடத்திலிருந்து கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். சாதாரணமாக கடல் அலையின் உயரம் 7 அடி எழும்பும்; கொந்தளிப்பாக இருந்தால் 10 அடி இருக்கும். ஆனால் சுனாமியின் போது, 100 அடி உயரத்துக்கு அலை எழும்பியது. சுனாமி, சில நொடிகளில் அதிக கொள்ளவு தண்ணீரை கரைக்கு தள்ளுகிறது.
எச்சரிக்கலாம்: சுனாமியை தடுக்க முடியாவிட்டாலும், அது வருவதற்கு முன் கண்டறிந்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாம். கடலில் பூகம்பம் ஏற்பட்டவுடன், பேரலைகள் உருவாகின்றனவா என கண்டறிய எச்சரிக்கை கருவிகள், கடல்களில் அமைக்கப்பட்டுள்ளன. இது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும். இதன் அடிப்படையில், அலைகளின் மாற்றத்தை விஞ்ஞானிகள் அறிந்து, பாதிப்பை ஏற்படுத்தும் என உணர்ந்தால், மக்களை எச்சரிக்கின்றனர். இதனால், அழிவின் அளவை வெகுவாக குறைக்கலாம்.
No comments:
Post a Comment