மாயன் வம்சத்தினர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் மண்ணியல், விண்ணியல், சிற்பம், ஓவியம், காலக்கணிதம், வடிவ இயல், மாந்திரீகம், கணிதம், அறிவியல் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். உயர்ந்த அறிவு படைத்த அவர்கள் ஒரு காலண்டரை உருவாக்கியிருந்தனர். அந்த காலண்டரில் குறிப்பிட்டுள்ளபடியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன.
அந்தக் காலண்டர் டிசம்பர் 21, 2012 உடன் முடிந்து போகிறது. அதன் பின் ஒன்றுமில்லை. இதனால் உலகம் அழிந்து விடுமோ என்ற பரபரப்பு உருவாகியுள்ளது. இல்லாவிட்டால் அவ்வளவு அறிவு படைத்த மாயன் சந்ததிகள் அந்த காலண்டரின் தொடர்ச்சியாக வேறு காலண்டரை உருவாக்கியிருக்க மாட்டார்களா? அதுசரி, இந்த மாயன்கள் யார்? அவர்களுக்கு எப்படி உலக அழிவை கணித்துக் கூறும் ஆற்றலும், திறனும் வந்தது? கிறிஸ்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 2000, 3000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்ற இனம் தென்அமெரிக்காவில் இருந்தது. அவர்கள் வானியல் சாஸ்திரம் முதல் புவியியல், விஞ்ஞானம், சிற்பக்கலை, கட்டடக்கலை என பல கலைகளில் ஆற்றல் மிகுந்தவராக வாழ்ந்தனர்.
இவர்கள் உருவாக்கிய காலண்டர் கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி முடிவுக்கு வருகிறது. அவர்களது நாள் காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது. அது சுழன்று 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது தற்போதுள்ள நம் நவீன நாள்காட்டியின்படி, கி.மு. 3114-ஐக் குறிக்கிறது. மாயன் காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நவீன நாள்காட்டியின்படி கி.பி. 2012 டிசம்பர் மாதம் 21-ம் தேதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது.
மிகச் சிறந்த வானியல் அறிவு பெற்றிருந்த மாயன் இன மக்கள் 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியுடன் தங்கள் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? அன்றுதான் உலகத்தின் இறுதிநாள். அதனால்தான் அவர்கள் காலண்டரில் அதன் பிறகு தேதிகள் இல்லை. அதன் பிறகு இந்த உலகம் இருக்காது இதுதான் மாயன் காலண்டரை நம்புவோரின் நம்பிக்கையாக இருக்கிறது. இது உண்மைதானா? உலகம் அழிந்து விடுமா? நாசா விஞ்ஞானிகள், அதற்கு வாய்ப்பே இல்லை. இதெல்லாம் வீண் புரளி என்கிறார்கள். ஆனால் நம்பிக்கையாளர்கள் பலர், உலகம் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படக் கூடும். ஏதேனும் புதிய கிரகங்கள் அல்லது விண்கற்கள் சூரியனுடனோ அல்லது பூமியுடனோ மோதலாம்.
இதைப்பற்றி மாயன்கள் தங்கள் சிலம்பலம் நூலில் மிகத் தெளிவாகக் குறித்துள்ளனர். அதன் காரணமாக பூமி சுழற்சியில் அல்லது சூரியனின் பாதையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். ஆபத்துக்கள் நேரலாம் என நம்புகின்றனர். இது பற்றி சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள் கூறியதாவது:- வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? இல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன.
சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது. விஞ்ஞானிகளின் அதி நுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவது போல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்றார்.
No comments:
Post a Comment