சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கற்றவனை கண்ணுடையர் என்றும், கல்லாதவனை புண்ணுடையர் என்றும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர். மெய்யறிவைத் தரக் கூடியது கல்வி என்று சங்க கால நூல்கள் கூறுகின்றன. சங்க காலம் தொடங்கி இது நாள் வரை தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதால் கல்வி சிறந்த தமிழ்நாடு என்று தமிழ்நாட்டை சிறப்பித்து பாடியுள்ளார் மகாகவி பாரதியார்.
கற்றலால் சிறப்பும், கல்லாமையால் இழிவும் வந்தெய்தும் என்று புலவர் இளங்கீரனார் பாடியுள்ளார். ஒருவன் கல்வி கற்றால் அவனிடம் உள்ளத்தால் துணிவும், உடலளவில் பணிவும் வந்து சேரும் என்பது சான்றோர் வாக்கு. கீர்த்தியும் பெருமையும் கிடைப்பது கல்வி என்று கல்வியைப் பற்றி ஒளவையார் எடுத்துரைத்துள்ளார். அனைத்து அணிகலனையும் விட கல்வி அழகே அழகு என நாலடியார் பாடல் தெளிவாக்குகிறது. நன்மையும், தீமையும் விளையக் கூடிய நிலமாக இருப்பது மனம். ஆதலால் ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வியையே மக்களுக்கு போதிக்க வேண்டும் என்றார் அறிஞர் பிளாட்டோ.
பூசை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்துக் கட்டும் நம் மக்கள் படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்று தான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை அனைவரும் கற்க வேண்டும்; கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு சலுகைகளை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.
ஓன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது. மாணவ-மாணவியர் பசியின்றி கல்வி கற்க வசதியாக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவுத் திட்டத்தில் மாணவ-மாணவியரின் விருப்பத்திற்கேற்ப உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 ஜோடி சீருடை, காலணிகள், கணித உபகரணப் பெட்டி, வண்ண பென்சில்கள், புத்தகப் பை, புவியியல் வரைபடம் ஆகியவை ஆண்டுதோறும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கிராமப்புற மக்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஆரம்பப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாகவும், இடை நிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. மேல் நிலை வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு விலை ஏதுமின்றி மிதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேல் நிலைக் கல்வியில் இடை நிற்றலை தடுக்கும் வகையில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் திட்டம் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கணினி வழிக் கல்வி அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,660 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முன் எப்போதும் இல்லாத உயர் அளவாக இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கென 14,553 கோடி ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment