முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,308 பேர் அடங்கிய இறுதிப்பட்டியல் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகி, புதன்கிழமையே சென்னைக்குப் புறப்பட்டு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே பணியிடங்களைத் தேர்வு செய்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுடன் சேர்த்து இவர்களுக்கும் சென்னையில் முதல்வர் தலைமையில் வியாழக்கிழமை (டிசம்பர் 13) நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஏற்பாடு செய்துள்ள வாகனங்கள் மூலம் இவர்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு வேறொரு தேதியில் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தாவரவியல் பாடத் தேர்வு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கிற்காகவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்காகவும் 500-க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 2,895 பணியிடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட சரியான விடைகளில் பல தவறானவை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் இந்தப் பட்டியலை ரத்து செய்ய உத்தரவிட்டது. புதிய விடைகளின் அடிப்படையில் அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்யவும் உத்தரவிட்டது. மறுமதிப்பீட்டுக்குப் பிறகு இப்போது இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment