அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895 பணியிடங்களில், 2,308 பேரை மட்டும் தேர்வு செய்து, பங்கேற்க செய்தனர். இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பணியிட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த உத்தரவு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல், தேர்வு பெற்றவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின், புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை, பள்ளிக் கல்வித் துறையிடம், இன்னும் டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதனால், 2,308 பேரின், பணி நியமனம், எப்போது நடக்கும் என, தெரியாத நிலை உள்ளது. கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "டி.ஆர்.பி.,யில் இருந்து, உரிய ஆவணங்கள் வந்ததும், பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற ஆசிரியர்களைப்போல், முதுகலை ஆசிரியர்களும், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படுவர்' என, தெரிவித்தனர். கடந்த, கல்வியாண்டுக்கான, காலி பணியிடங்களுக்குத் தான், தற்போது நியமனம் நடக்கிறது.
2,895 பணியிடங்களில், 2,308 பேர் நியமிக்கப்பட்டால், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படாது. அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரியில், புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் தான், அதிக காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, அனைத்து ஆசிரியர்களும், மேற்கண்ட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment