தமிழகம் முழுவதும் உள்ள, ஓட்டு சாவடி மைய அதிகாரிகளுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டு சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த மையங்களுக்கான தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன், வாக்காளர் பட்டியல் சம்பந்தமான பணி என்றால், அந்தந்த தொகுதி தேர்தல் பிரிவு அலுவலகங்களை நாடும் நிலைமை உள்ளது. சில தொகுதிகளில், தாசில்தார் அலுவலகத்தை அடைய, பல கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், சிரமமின்றி, வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற வசதியாக, நிரந்த ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை நியமிக்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
இதற்கான அறிவிப்பு, ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அரசியல் சார்பற்றோர், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பொது துறை நிறுவன ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுநல சங்கத்தினர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, பல தொகுதிகளில், நிரந்தர ஓட்டு சாவடி மைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். சில தொகுதிகளில் அவர்களை நியமிக்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. ஓட்டுசாவடி மைய அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையத்துடன் நேரிடையான தொடர்பு ஏற்படுவதோடு, பொதுமக்களும் அலைய வேண்டியதில்லை. இந்நிலையில், ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை, பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அடையாள அட்டையில், புகைப்படம், தொகுதியின் பெயர், நபரின் பெயர், பகுதி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகளை தயார் செய்யும் பணி, விரைவாக நடந்து வருகிறது.
No comments:
Post a Comment