"அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம் பெறும் நபர்களின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில், போலீஸ் துறையின், தடயவியல் பிரிவுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். "இந்த ஆட்கள் தேர்வின்போது, நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, பாட்னா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது, "நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, பீகார் மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்வதேந்தர் குமார், எஸ்.ஜே.முகோபத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிறப்பித்த உத்தரவு:
அரசுப் பணிகளுக்காக நேர்முகத் தேர்வு நடத்துவோரின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோர முடியாது. அவ்வாறு பெயர்களை வெளியிட்டால், அந்த நேர்முகத் தேர்வுக் குழுவில் உள்ளவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்வதற்கான, ஒரு வழிமுறை என்றாலும், அதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சில வரையறைகள் உள்ளன. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பாட்னா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை, தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment