தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்று விடும். எஞ்சிய 85 சதவீத இடங்கள் மாநில அரசின் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும். அந்த வகையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,696 எம்.பி.பி.எஸ். இடங்களும், சென்னையில் மட்டும் உள்ள ஒரேயொரு அரசு மருத்துவ கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்களும் கவுன்சிலிங் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
2006-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பொது நுழைவுத்தேர்வு மூலமாகவே மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். நுழைவுத்தேர்வு முறையால் கிராமப்புற மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு 2006-ம் ஆண்டு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தற்போது வரை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே தொழிற்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே, எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கு தற்போது இருந்து வருவதைப் போல பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுமா? அல்லது மத்திய அரசு அறிவித்ததைப் போன்று தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுமா? என்று தமிழக மாணவ-மாணவிகளும், பெற்றோரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்னும் 2 வாரங்களில் முடிவடைய உள்ளது. எனவே, தேசிய நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதா? வேண்டாமா? தமிழக அரசின் முடிவு என்ன? என்பது தெரியாமல் மாணவ-மாணவிகள் மேலும் கவலை அடைந்தனர். இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறையில் சொல்லப்பட்டு இருந்தாலும், நுழைவுத்தேர்வை தவிர்ப்பதற்கும் அந்த விதிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, வரும் கல்வி ஆண்டில் வழக்கம்போல் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் பொது கவுன்சிலிங் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உறுதிபட தெரிவித்தனர்.
No comments:
Post a Comment