ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவுக்காக அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பந்தல். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் பிரமாண்ட விழாவில் சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக, அனைத்து ஆசிரியர்களும் அந்தந்த மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். முதல்வர் ஜெயலலிதா 36 ஆசிரியர்களுக்கும், மீதமுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளில் கல்வித் துறை, காவல்துறை அதிகாரிகள் இரவும், பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு வருகிறது.
தாற்காலிக உணவு விடுதிகள், கழிவறைகள் என பல்வேறு வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 18,382 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் நடைபெற்றன. மொத்தம் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தனர். அதேபோல், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 2,308 பேர் அடங்கிய இறுதிப்பட்டியலை ஆசிரியர் தேர்வு தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டது. தேர்வு பெற்றுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் அதன் நகல், 2 புகைப்பட நகலுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை புதன்கிழமை காலை 10 மணிக்கு அணுக வேண்டும்.
அவ்வாறு வரும்போதே அவர்கள் சென்னைக்குப் புறப்படும் வகையில் தயாராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதல்வர் தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 500 பஸ்கள்: ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் இருந்து 500-க்கும் அதிகமான பஸ்களில் ஆசிரியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை பல்வேறு நேரங்களில் இந்த பஸ்கள் புறப்படும் எனத் தெரிகிறது. புதன்கிழமை இரவு சென்னைக்கு வரும் இந்த ஆசிரியர்களுக்காக 38 பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் குழு மேற்பார்வையில் செய்யப்பட்டு வருகிறது. அதோடு, காலை, மதியம், இரவு என ஆசிரியர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 250 தாற்காலிக கழிவறை வசதிகள்: விழாவில் பங்கேற்க வரும் ஆசிரியர்கள் அதிகாலை முதல் மாலை வரை விழா அரங்கில் தங்கியிருக்க வேண்டும் என்பதால் 250 தாற்காலிக கழிவறைகளை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் அரங்கை செவ்வாய்க்கிழமை மாலை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். போலீஸ் கெடுபிடி: சென்னை அண்ணாசாலையில் 500 பஸ்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அதிகாலை 3 மணிக்குள் விழா அரங்குக்குள் ஆசிரியர்களைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்றும், அதன்பிறகு இரவு 8 மணிக்குத்தான் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. தாற்காலிக கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டாலும், ஒரே இடத்தில் 21 ஆயிரம் ஆசிரியர்களை 18 மணி நேரத்துக்கும் அதிகமாக காக்க வைக்கும் காவல்துறையின் முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
. இந்த விதிகளை சற்றுத் தளர்த்தி காலை 8 மணி வரை அவர்கள் விழா அரங்கிற்கு வர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் பிற்பகலில் அதாவது 2 மணி முதல் 5 மணி வரை அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment