மேல்நிலைத் தேர்வு பள்ளி மாணவர்களின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு 04.01.2013 மாலை 4.00 மணிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை ஆன்-லைனில் பதிவதற்கு 23.01.2013 மாலை 4.00 மணிவரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அவர்கள் அறிவித்துள்ளார்.
Monday, December 31, 2012
மேல்நிலைத் தேர்வு பள்ளி மாணவர்களின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு 04.01.2013 மாலை 4.00 மணிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை ஆன்-லைனில் பதிவதற்கு 23.01.2013 மாலை 4.00 மணிவரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அவர்கள் அறிவித்துள்ளார்.
1999 ல் பிறந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத முடியுமா
எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதுவோரின் விபரம் சேகரிப்பில்,1999 ல் பிறந்தவர்களை ஆன்-லைனில் ஏற்க மறுப்பதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது 14 க்குள் இருக்க வேண்டும் என்பது அரசு விதி. 2013 மார்ச்சில் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் விபரங்கள், பிறந்த தேதியுடன் ஆன்-லைனில் பதியப்படுகிறது
.1998ல் பிறந்தவர்களின் விபரங்கள் ஆன்-லைன் ஏற்கப்படும் நிலையில், 99ல் பிறந்தவர்களின் வயது 14 முடியாததால், ஆன்லைனில் பதிய முடியவில்லை. இதனால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். 1999ல் பிறந்த மாணவர்களின் பிறந்த ஆண்டை, தற்காலிகமாக 1998 என குறிப்பிட்டு, பதிவு செய்ய கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க, முடியாமல் உள்ளனர். தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,
""14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1999ல் பிறந்தவர்களின் வருடத்தை 1998 என குறிப்பிட்டு, சாப்ட்வேரில் ஏற்ற சொல்கின்றனர். இந்த முறை தற்காலிமானது என்றாலும், அதை மீண்டும் சரியாக மாற்றாவிடில், பிறந்த சான்றிதழிலும், எஸ்.எஸ்.எல்.சி.,மார்க் பட்டியலிலும் பிறந்த ஆண்டு மாற வாய்ப்பு உள்ளது,''என்றார். கல்வித்துறை கம்ப்யூட்டர் பிரிவு அலுவலர்கள் கூறுகையில்,""1999 ல் பிறந்து,14 வயதை தாண்டாதவர்களுக்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 6 மாதம் கால நீடிப்பு சான்றிதழ் பெற்று, வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.இதன் அடிப்படையில், 14 வயதை கணக்கிட்டு, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பிறந்த சான்று, டி.சி.,யில் உள்ள பிறந்த தேதிக்கு ஏற்ப மார்க் பட்டியலிலும் ஒரே மாதிரி இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் பயப்பட வேண்டாம்,'' என்றனர்.
10, பிளஸ் 2 பொது தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12ம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
மார்ச் ஒன்றாம் மற்றும் 4ம் தேதி மொழித்தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆங்கிலத்தாள் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளிலும், இயற்பியல் மற்றும் பொருளியியல் தேர்வுகள் 11ம் தேதியும் நடைபெற உள்ளன. மார்ச் 14ம் தேதி கணக்கு, விலங்கியல் மற்றும் நுண் உயிரியல் தேர்வுகளும், 15ம் தேதி வணிகவியல் தேர்வும் நடைபெறுகிறது. வேதியியல, கணக்கியல் தேர்வுகள் 16ம் தேதியும், உயிரியியல், வரலாறு, வணிக கணிதம் தேர்வுகள் 21ம் தேதி நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கத் துறை தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொழித்தாள்கள் இரண்டும் 27 மற்றும் 28ம் தேதி நடைபெறுகிறது. ஆங்கிலத் தாள்கள் இரண்டும் ஏப்ரல் ஒன்று மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற உள்ளது. 5ம் தேதி கணித தேர்வும், 8ம் அறிவியலும், 12ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கத் துறை அறிவித்துள்ளது. இத்தேர்வை 10 லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.
2013–ம் ஆண்டில் எந்தெந்த அரசு பணி இடங்களுக்கு எப்போது தேர்வு? டி.என்.பி.எஸ்.சி. ஜனவரி இறுதியில் அறிவிப்பு வெளியிடுகிறது
டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 2013–ம் ஆண்டு எந்தெந்த அரசு பணி இடங்களுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்? என்ற கால அட்டவணை ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படுகிறது.
இதன்மூலம், அரசு பணியில் சேர விரும்புவோர் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள முடியும். அரசு வேலைக்கு தேர்வு தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் எழுத்தர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள், சார்நிலை பணியாளர்கள், குரூப்–ஏ அதிகாரிகள் போன்றோர் தமிழ்நாடு அரசு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு போட்டித்தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது. போட்டித்தேர்வுகள் குரூப்–1, குரூப்–2, குரூப்–4 என்று பல்வேறு நிலைகளில் நடத்தப்படுகிறது. எழுத்தர்களும், தட்டச்சர்களும், கிராம நிர்வாக அதிகாரிகளும் குரூப்–4 தேர்வு மூலமாகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரிகள், நகராட்சி கமிஷனர்கள், சார்–பதிவாளர்கள், உதவி தொழிலாளர் ஆய்வாளர்கள், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிகள், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரிகள், வருவாய் உதவியாளர்கள் போன்றோர் குரூப்–2 தேர்வு மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தேர்வு காலஅட்டவணை
இதேபோன்று, துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. ஊராட்சி உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய உயர் பதவிகள் குரூப்–1 தேர்வு மூலமாகவும் நேரடியாக நிரப்பப்படுகின்றன.எந்த தேர்வுக்கு எப்போது அறிவிப்பு வரும்? எப்போது தேர்வு நடத்தப்படும்? தேர்வு முடிவு எப்போது வரும்? என்பன போன்ற விவரங்கள் முன்கூட்டியே தெரியாது. டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஆர்.நட்ராஜும், செயலாளராக டி.உதயச்சந்திரனும் (தற்போது வேறு பதவியில் உள்ளார்) பொறுப்பேற்ற பின்னர் ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு எப்போது? தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? ஆகிய விவரங்களுடன் வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (ஆனுவல் பிளானர்) வெளியிடும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஜனவரி இறுதியில் வெளியீடு அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதன்மூலம், அரசு பணியில் சேர விரும்புவோர் தங்களை முன்கூட்டியே குறிப்பிட்ட தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள முடிந்தது. காலவரையுடன் தேர்வு முடிவு தேதி, நேர்முகத்தேர்வு, இறுதி முடிவு ஆகியவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதால் போட்டித்தேர்வுக்கு படித்து வந்த மாணவ–மாணவிகள் உற்சாகத்தோடும், முழுமூச்சோடும் படிக்கும் நிலை உருவானது.இந்த நிலையில், 2013–ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை தயாரிக்கும் பணி முடிவடையும் தருவாயில் இருக்கிறது. காலி இடங்கள் பற்றிய பட்டியல் 75 சதவீதம் பெறப்பட்டுவிட்டன.
இன்னும் ஒருசில துறைகளில் இருந்து குறிப்பிட்ட சில பதவிகளுக்கான காலி இடங்களின் பட்டியல் வரவேண்டியுள்ளது. அதுவும் கிடைக்கப்பெற்றதும் 2013–ம் ஆண்டுக்கான காலஅட்டவணை இறுதி செய்யப்பட்டு ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்
Sunday, December 30, 2012
72 பள்ளிகளில் ரூ.2.58 கோடியில் அடிப்படை வசதி
திருப்பூரில், 2.58 கோடி ரூபாய் செலவில், 72 மாநகராட்சி பள்ளிகளில், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, சீரமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தன.
மேல்நிலைத் தொட்டி அமைத்து தண்ணீர் வசதியும், கழிப்பிடம் அமைத்துக் கொடுக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி முதல் மண்டலத்தில் உள்ள 12 மாநகராட்சி பள்ளிகளில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இரண்டாவது மண்டலத்தில் 32 பள்ளிகளில் 65 லட்சம் ரூபாய் செலவிலும், மூன்றாவது மண்டலத்தில் 17 பள்ளிகளில் 62.40 லட்சம் ரூபாய்;
நான்காவது மண்டலத்தில் 66 லட்சம் ரூபாய் செலவில் தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்படும். நான்கு மண்டலத்திலும் சேர்த்து, மொத்தம் 72 பள்ளிகளுக்கு, 2.58 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தொகையை கல்வி நிதியிலிருந்து செலவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
பல்கலைக்கழக மானியக்குழு நடத்திய கல்லூரி உதவி பேராசிரியர் தகுதி தேர்வு 7½ லட்சம் பேர் எழுதினார்கள்
பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தகுதி தேர்வு இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 7½ லட்சம் பேர் எழுதினார்கள். கல்லூரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரிகளில் ஆசிரியராக சேர்வதற்கு முன்பு முதுகலை பட்டப்படிப்புடன் எம்.பில். படித்தால் போதும் என்று இருந்தது.
தற்போது அந்த நிலை மாறி பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அல்லது மாநில அரசு நடத்தும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் நெட் தேர்வு நேற்று நாடுமுழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 77 மையங்களில் 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினார்கள். தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல நகரங்களில் தேர்வு நடந்தது. 12 ஆயிரத்து 500 பேர் எழுதினார்கள் சென்னையில் பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரி, புதுக்கல்லூரி, உள்பட 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
தேர்வு காலையிலும், மாலையிலும் நடைபெற்றது. சென்னை நகரில் மட்டும் 12 ஆயிரத்து 500 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு 3 தாள்களை கொண்டது. முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி காலை 10.45 மணிக்கு முடிந்தது. இதற்கு 100 மதிப்பெண்கள். 60 கேள்விகள் கேட்கப்பட்டு அதில் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். 2–வது தாள் காலை 10.45 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிந்தது. இதில் 50 கேள்விகள் கேட்கப்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவேண்டியது கட்டாயம். இந்த தாளுக்கு 100 மார்க் ஆகும். 3–வது தாள் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிந்தது. இந்த தாளுக்கு 150 மதிப்பெண்கள்.
75 கேள்விகள் கேட்கப்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவேண்டும். தேர்வை எழுத ஆண்களும், பெண்களும் வந்திருந்தனர். சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு அறைக்கு வெளியே கணவர் அல்லது தாயிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தேர்வு எழுதினார்கள்.
"நேர்முக தேர்வு நடத்தியவர்களின் பெயர்களை தகவல் உரிமை சட்டப்படி வெளியிட முடியாது'
"அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம் பெறும் நபர்களின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில், போலீஸ் துறையின், தடயவியல் பிரிவுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். "இந்த ஆட்கள் தேர்வின்போது, நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, பாட்னா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது, "நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, பீகார் மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்வதேந்தர் குமார், எஸ்.ஜே.முகோபத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிறப்பித்த உத்தரவு:
அரசுப் பணிகளுக்காக நேர்முகத் தேர்வு நடத்துவோரின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோர முடியாது. அவ்வாறு பெயர்களை வெளியிட்டால், அந்த நேர்முகத் தேர்வுக் குழுவில் உள்ளவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்வதற்கான, ஒரு வழிமுறை என்றாலும், அதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சில வரையறைகள் உள்ளன. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பாட்னா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை, தள்ளுபடி செய்தனர்.
ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை: சிதான்சு எஸ்.ஜெனா
நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2010-11, 2011-12 ஆகிய கல்வியாண்டுகளில் பயின்ற மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 481 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவுக்குத் தலைமையேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார். விழாவில் சிதான்சு எஸ்.ஜெனா ஆற்றிய உரை:
மாணவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கு நெறி சார்ந்த கல்வி மிகவும் அவசியம். மனித உரிமைகள், நல்லிணக்கமாக வாழ்வது, அமைதியை விரும்புவது, ஜனநாயக மரபுகள், பிறருக்காக உதவுவது ஆகிய பண்புகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில், ஆசிரியர் கல்வியில் உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இப்போதைய கல்விமுறை தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிடம் முழுமையாக சரணடைந்துள்ளது. மனித பண்புகளுக்கோ, மற்றவர்களை மதிப்பதற்கோ கல்வி முறை முக்கியத்துவம் வழங்குவதில்லை.
நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக முழுமையான புரிதலையோ, அறிவையோ இன்றைய கல்வி முறை வழங்கவில்லை. மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையைத்தான் கல்வி நிறுவனங்கள் வளர்க்கின்றன. இணைந்து செயல்படுவது என்ற பண்பு மாணவர்களிடம் மறைந்துவருகிறது. மாணவர்கள் பல சாதனைகளைப் புரிந்தாலும் அவர்களிடம் மனிதநேயம் குறைந்துவருகிறது. எனவே, மனித மதிப்பீடுகள், நெறிசார்ந்த கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது மிகுந்த அவசியமாகிறது. இயற்கையை ரசிக்கவும், மனித உறவுகளை மதிக்கவும், கலைகளைப் படைக்கவும், பிறருக்காக இரங்கும் மனப்பான்மையையும் மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் ஆசிரியர் கல்வி இருக்க வேண்டும். கல்வி சார்ந்த சில குறிப்புகளையோ, ஆய்வுகளையோ மட்டும் ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்காமல் உலகமயமாக்கல், அமைதி, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம் குறித்து ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள தனித்தன்மையை அறிந்து அதனை ஊக்குவிக்க வேண்டும். கற்பித்தலுக்கான புதிய வழிமுறைகளையும், சூழல்களையும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார் சிதான்சு எஸ்.ஜெனா. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் பி.பழனியப்பன், துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன், உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வ வர்மா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Saturday, December 29, 2012
10ம் வகுப்பு மாணவர்கள் விவரம்: இணையதளத்தில் பதிய காலக்கெடு நீட்டிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
. தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜன., 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத் துறை உத்தரவிட்டது. "மின்வெட்டு பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது' என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜன., 23ம் தேதி வரை நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத்தில் முன்பணம் கடனாக வழங்க யோசனை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை முன்பணம் கடனாக வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 2004 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
பணிக்காலத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத ஓய்வூதிய தொகையுடன், அதே அளவு பணத்தை அரசும் செலுத்தும். அத்தொகை, ஓய்வு பெறும்போது ஒரு பகுதியை கையில் வழங்கும். மற்றொரு பகுதி பங்கு வர்த்தகத்தில் நீண்டகால, குறுகிய கால முதலீடு செய்யப்படும். அதில் கிடைக்கும் லாப தொகை ஊழியருக்கு பின்னாளில் வழங்கப்படும் இத்திட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றன.
எனவே மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் மட்டும் இன்னும் அமல்படுத்தவில்லை. இந்நிலையில் இத்திட்டத்தை ரத்து செய்யும் வரை, இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு முன்பணம் கடனாக வழங்கலாம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் ஒவ்வொரு ஊழியரும் ஓய்வு பெறும்போது முழுத் தொகையும் கையில் கிடைக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பர். பங்கு வர்த்தகத்தில் பின்னாளில் கிடைக்கும் தொகை, எந்தளவு நிச்சயம் என தெரியாததால் எதிர்க்கின்றனர். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன் கூறியதாவது:
புதிய ஓய்வூதிய திட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதனை எதிர்க்கும் முதல்வர், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது ரத்து செய்யும் வரை, அத்தொகையில் முன்பணம் கடனாக வழங்கலாம். போஸ்ட் ஆபீஸ், வங்கிகளில் தொடர் வைப்பு கணக்கு மீது கடன் வழங்குகின்றனர். அதுபோல இந்த யோசனையை பரிசீலிக்கலாம், என்றார்.
நியாயவிலைக் கடைகளில் ஜனவரி 1 முதல் இலவச வேட்டி சேலைகள
சென்னை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலைகள் ஜனவரி-1 முதல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என்றுசென்னை மாவட்ட ஆட்சியர்(பொ) தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பொங்கல் திருநாள் 2013ஐ முன்னிட்டு தமிழக அரசால் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைகள் வரும் ஜனவரி 1ஆம் தெதி முதல் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 1ம்தேதி முதல் விலையில்லா வேட்டி சேலை நியாயவிலைக் கடைகளின் மூலமாக வழங்கப்பட உள்ளது. அவை பட்டியலில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்பட உள்ளன. குடும்ப அட்டை எண் வரிசையாக வேட்டி சேலை வழங்கும் பணி நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது அட்டை எண்ணுக்கு உரிய நாளில் வேட்டி சேலையை பெற்றுக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர்(பொ) ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை மீண்டும் மாற்றம்
அரசு பள்ளிகளின் அரையாண்டு விடுமுறையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி முடிந்து, ஜனவரி 1ம் தேதியிலிருந்து, விடுமுறை ஆரம்பிக்கும். விடுமுறை முடிந்து, 21ம் தேதி அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இந்நிலையில், அரசு பள்ளிகளின் வேலை நாட்களை கூடுதலாக்கும் நல்ல நோக்கத்தில், அரையாண்டு விடுமுறையை குறைக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. இதன்படி, ஜனவரி 2 முதல் 11ம் தேதி வரை அரசு பள்ளிகள் இயங்கும். ஜனவரி 12ம் தேதி முதல், 20ம் தேதி வரை மட்டும் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என, முடிவு செய்யப்பட்டது.
விடுமுறை குறைப்புக்கு சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏற்கனவே இருந்தவாறு, ஜனவரி 1ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து, ஜனவரி 21ம் தேதி, அரசு பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு முக்கிய குறிப்புக்கள்:
* 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
* முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான கலந்தாய்வினை ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் நடத்தப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் அன்றே தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.
* தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
* நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.