பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 'ஒரு இந்தியா - ஒரு எண்' என்ற திட்டத்தின் கீழ், அலைபேசிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள, இலவச 'ரோமிங்' திட்டம், ஓராண்டுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பின், ரோமிங் கட்டணம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது. தமிழக தொலைத் தொடர்பு வட்டத்தை சேர்ந்த எண்ணை, வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்தினால், உள் அழைப்புகளுக்கும், வெளியே செல்லும் அழைப்புகளுக்கும் ரோமிங் கட்டணம் உண்டு.
இதனால், அலைபேசி வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த கட்டண சுமையை குறைக்க, 'ஒரு இந்தியா - ஒரு எண்' திட்டம் மூலம், தொலைத் தொடர்பு வட்டத்தை தாண்டி செல்லும் வாடிக்கையாளர்களுக்கான, ரோமிங் கட்டணத்தை, மத்திய தொலை தொடர்புத் துறை, கடந்த 15ம் தேதியில் இருந்து ரத்து செய்தது. இதன்மூலம், பி.எஸ்.என்.எல்., அலைபேசி வாடிக்கையாளர்கள், நாடு முழுவதும் ஒரே எண்ணை பயன்படுத்தலாம்; அதற்கு ரோமிங் கட்டணம் கிடையாது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை தொடர்ந்து, சில தனியார் அலைபேசி நிறுவனங்கள், ரோமிங் கட்டணத்தை ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், 'ரோமிங் கட்டண ரத்து சலுகை, ஓராண்டுக்கு மட்டுமே' என, தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரோமிங் கட்டண ரத்து என்பது, நல்லெண்ண அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இக்கட்டண சலுகை, 'போஸ்ட் பெய்டு, பிரீ பெய்டு' அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு, ஓராண்டுக்கு மட்டும் அமலில் இருக்கும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொலைத் தொடர்பு துறையில் நிலவும் போட்டியில், வாடிக்கையாளர்களை ஈர்க்கவே, ரோமிங் கட்டண சலுகை தற்காலிகமாக வழங்கப்பட்டு உள்ளது. நீண்ட காலத்துக்கு சலுகை அளித்தால், நஷ்டம் ஏற்படும். எனவே, நிரந்தரமாக இலவச ரோமிங் திட்டத்தை தொடர முடியாது' என்றார்.
No comments:
Post a Comment