சேலத்தை சேர்ந்த மாணவி ரம்யா என்பவர் சார்பாக அவர் தந்தை கருணாநிதி உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளோம். ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு படித்த மாணவர்கள் பலர் குறைவாக கட் ஆப் மார்க் பெற்றுள்ளனர்.
இயற்பியல் பாடத்தில் குறைவான மாணவர்கள்தான் 200க்கு 200 மார்க் பெற்றுள்ளனர். அதுபோல உயிரியல் பாடத்திலும் குறைவான மாணவர்கள்தான் 200க்கு 200 மார்க் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் 200க்கு 200 மார்க் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கட் ஆப் மார்க் அதிகமாக இருந்ததால் பல மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே எங்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை அந்த மாணவர்களுக்கு கிடைத்து விடும்.
இதனால் நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவே கடந்த ஆண்டு மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்தால் அதை ஏற்க கூடாது. அவர்களை தேர்வு செய்ய மருத்துவ கவுன்சிலுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து மனுதாரர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
வரும் 27ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ராகவாச்சாரி, கே.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
No comments:
Post a Comment