அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை இந்த ஆண்டு முதல் மீண்டும் நீதி போதனை பாடத்திட்டம் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நீதிபோதனை என்ற சிறப்பு பாடத்திட்டம் இருந்தது. வாரத்தில் ஒருநாள் இவ்வகுப்புகள் நடத்தப்படும். இதில் கதைகள் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் இத்திட்டம் சில வருடங்களுக்கு முன்பு முடங்கியது.
இத்தகைய சூழலில், வகுப்பில் தங்களை அடிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் திருப்பி அடிப்பது, வகுப்பில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை கேலி செய்வது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடக்க தொடங்கின. இதை மாற்ற, பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் நீதிபோதனை வகுப்பை மீண்டும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரையில் நீதி போதனை வகுப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறைப் படுத்தப்படும். மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் விஷயங்களை அடிப்படையாக கொண்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்பதால் படிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். நீதி போதனை வகுப்புக்கென ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், நீதி போதனை வகுப்புக்காக சிறப்பு கையேடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. 6, 7, 8ம் வகுப்புகளை தொடர்ந்து, 2வது கட்டமாக 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment