தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மதிப்பெண்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் குறித்த விவரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கான இணையதள முகவரி விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 7-ஆம் தேதி வெளியான நிலையில், விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்த லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில், ஆயிரக்கணக்கானோர் மட்டுமே மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் பெற கடந்த ஜூன் 1-ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.
மாணவர்களின் மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண்ணைத் தொகுக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதால், திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் தேர்வுத் துறையின் இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எம்.பி.பி.எஸ். - பி.இ. தேர்வுக் குழு: திருத்தியமைக்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி., மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
புதிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் விவரங்கள் அரசின் "நிக்' மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அவர்களுக்கான தாற்காலிக புதிய மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். மதிப்பெண் மாற்றம் இருந்தால் மட்டுமே...: இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ள மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் மாணவர் பட்டியலில், தங்களது பதிவு எண் இல்லாவிட்டால் உரிய பாடத்துக்குரிய விடைத்தாளில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள், அறிவிக்கப்படும் நாளில் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களுக்குச் சென்று, தங்களது பழைய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment