பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆய்வக உதவியாளர் பணிக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் 4,362 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த மே 31ம் தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
இந்த தேர்வு முறையை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:- ஆய்வக உதவியாளர் பணிக்கு போட்டித் தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், கடந்த மே 31ம் தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வும் நடந்தது. இந்த எழுத்துத் தேர்வு, ஆட்களை குறைப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது. அதாவது எழுத்து தேர்வில் பெறப்படும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் நேர்முகத் தேர்வில் 25 மதிப்பெண்களுக்கு ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, இந்த தேர்வு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 22ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, ‘ஆய்வக உதவியாளர் பணிக்கு, எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண், பள்ளிப் படிப்பில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்டவைகளை கொண்ட வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடத்தப்படும்’ என்று கூறினார். இதை கேட்ட நீதிபதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் ஜி.சங்கரன் ஆஜராகி வாதாடினார்.
No comments:
Post a Comment