தமிழகத்தில் இரு சக்கர ஓட்டிகள், பின்புறம் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது புதன்கிழமை (ஜூலை 1) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தலைக்கவசம் அணியாவிட்டால் அசல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.
இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், புதன்கிழமை (ஜூலை 1) முதல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து போலீஸாரும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்காக இரு துறைகளும் இணைந்த சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் புதன்கிழமை முதல் இவர்கள் தீவிர சோதனையைக் மேற்கொண்டு, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். இது குறித்து சென்னையைச் சேர்ந்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியது:
நீதிமன்ற உத்தரவு, தமிழக அரசின் ஆணையைத் தொடர்ந்து, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது. துண்டுப் பிரசுரங்கள் மூலமும் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளோம். புதன்கிழமை முதல் போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்படும். அப்போது, தலைக்கவசம் அணியாமல் வருபவர்களின் வாகனத்தின் அசல் (ஒரிஜினல்) பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.
ஒரு முறை நடவடிக்கைக்கு ஆளான இரு சக்கர வாகனம், இரண்டாவது முறையும் சிக்கினால் அந்த வாகன ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நீதிமன்றம் மூலமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது
No comments:
Post a Comment