இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து செல்பவர்கள் பள்ளி குழந்தைகளாக இருந்தாலும்,'ஹெல்மெட்' அணிந்து தான் செல்ல வேண்டும் என, போக்குவரத்து துறை அதி காரிகள் கூறியுள்ளனர்.
ஜூலை, 1ம் தேதி முதல், டூவீலர் ஓட்டுவோர், பின்னால் உட்கார்ந்து செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஹெல்மெட் அணிவதை, 100 சதவீதம் அமல்படுத்தும் வகையில், அரசு துறைகளும், தனியார் அமைப்பு களும், பல வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.வாகன பதிவின் போதும், லைசென்ஸ் எடுக்கச் செல்லும் போதும், ஹெல்மெட் அவசியமா என்ற சந்தேகங்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
மேலும், தற்போது பெரும்பாலானோர், பள்ளிகளுக்கு, குழந்தைகளை, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டுமா என்ற கேள்வி யும் எழுந்து உள்ளது. இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரு சக்கர வாகனத்தை பதிவு செய்து தான், வாகன உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும். வாகனத்தை விற்கும் நிறுவனமே, கூடவே, ஹெல்மெட் வழங்க வேண்டும். ஒருவேளை, வாகன பதிவுக்கு உரிமையாளர் செல்ல நேரிடும் போது, ஹெல்மெட் வாங்கிச் செல்ல வேண்டியதில்லை. லைசென்ஸ் வழங்குவதற்கு முன், ஓட்டுனர் சோதனையின் போதே, ஹெல்மெட் அணிந்து தான் ஓட்டிக் காட்ட வேண்டும். இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது.
இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தான் மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. அப்படியானால், இது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார். ஆனால், பெரும்பாலான ஹெல்மெட் விற்பனை கடைகளில், குழந்தைகளுக்கான ஹெல்மெட் இல்லை என்பதால், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment