இந்த வருடத்துக்கான ரயில்வேகால புதிய அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் ஜூலை 1ம் தேதி புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணையில் பிப்ரவரியில் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரயில்களின் பயணவிவரம் மற்றும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் வேகம் அதிகரித்தல், ேநரம் மாற்றி அமைத்தல் போன்ற விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.
ஆனால் கடந்த வருடம் நாடாளு மன்ற தேர்தல் மற்றும் புதிய அரசு அமைக்கப்பட்டதன் காரணமாக செப்டம்பரில் புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூலை 1ம் தேதி ரயில்வே கால அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட ரயில் பட்ஜெட்டில் புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்காத காரணத்தால் இந்த வருடமும் ஜூலை மாதம் ரயில்வே கால அட்டவணை வெளியிடப்படாது என கூறப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் வரை கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட காலஅட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இயங்கும் என்றும், இந்த ஆண்டிற் குரிய புதிய காலஅட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்ட தொடர் அடுத்த மாதம் கூடுகிறது. இந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் புதிய ரயில்கள் அறிவித்தல், இயங்கி கொண்டிருக்கின்ற ரயில்களின் சேவைகள் அதிகரித்தல், ரயில்களை நீட்டித்து இயக்குதல் ஆகிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் அகல பாதை பணிகள் முடிக்கப்பட்ட பழநி - பொள்ளாச்சி வழித்தடத்தில் புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு இல்லாத காரணத்தால் அந்த தடங்களில் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது.
இதை போன்று அகில இந்திய அளவில் பல்வேறு ரயில்கள் நிரந்தர ரயிலாக இயக்க நாடாளுமன்றத்தில் அறிவிக்காத காரணத்தால் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் அறிவித்து ரயில் கால அட்டவணையில் வெளியிடப்பட வேண்டும். இந்த பிரச்சினை குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள ரயில் பாதை மின் மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று மின்சாரரயில் இன்ஜின் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை முன் கூட்டியே வந்தடைகிறது. இதனால் வருகிற ரயில் கால அட்டவணையில் அனைத்து ரயில்களின் நேரங்களில் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். இந்த வருடம் ரயில் கால அட்டவணைகால தாமதம் ஆவதால் இரு வழிபாதை பணிகள் இன்னமும் அதிக அளவில் முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு இருவழிபாதை அதிகஅளவில் முடிக்கப்பட்டால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு கிராசிங்கான ரயில்கள் அதிகநேரம் நிற்கபடுவது தவிர்க்கப்பட்டுவிடும் என்றனர்.
No comments:
Post a Comment