கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில் சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், பயாலாஜி தேர்வில் வினாத்தாள் மிக கடினமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், நன்கு படித்த மாணவ, மாணவியரும் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சுயநிதி பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 1 சேர்க்கையை பொறுத்தவரை, கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் அடங்கிய தேர்வு செய்வதில், மாணவர்கள் முன்னுரிமை கொடுப்பது வழக்கம். ஏனெனில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எந்த பிரிவையும் தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.
இதனால், இந்த பிரிவில் சேர, அதிக போட்டியும் இருந்து வந்தது. நடப்பு கல்வியாண்டில்:ஆனால், கடந்த ஆண்டு வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றால், கடந்த ஆண்டை விட, நடப்பு கல்வியாண்டில், மேத்ஸ், பயாலஜி அடங்கிய முதல் பிரிவில் சேர்வதற்கான ஆர்வம், மாணவ, மாணவியரிடையே கணிசமாக குறைந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:மேல்நிலைக்கல்வியில், உயிரியல் பிரிவில், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய இரு பாடங்கள் உள்ளன. இதில் விலங்கியல் பாடத்தை பொறுத்தவரை, 75 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவதாக இருந்தாலும், 150 மதிப்பெண் அளவுக்கு பாடம் அதிக அளவில் உள்ளது.
அதாவது பியூர் சயின்ஸ் குரூப்பில் உள்ள விலங்கியல் தேர்வுக்கு, 150 மதிப்பெண்களுக்கு, 8 பாடம் படிக்க வேண்டும் என்றால், 'உயிர்-விலங்கியல்' தேர்வுக்கு, 75 மதிப்பெண்களுக்கு, 7 பாடங்கள் படிக்க வேண்டும். இதனால், சராசரியாக இருக்கும் மாணவர்களிடையே தடுமாற்றம் ஏற்படுகிறது.நான்கு பாடங்களிலும், 'சென்டம்' எடுக்க முடியும் என்ற மாணவர்களுக்கு, முதல் குரூப் எடுப்பதில், எவ்வித சிரமமும் இருப்பதில்லை. சராசரி மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களும், 'உயிரியல்' எடுத்து ஏன் கஷ்டப்படுகிறீர்கள். கம்ப்யூட்டர் சயின்ஸூக்கு அதிக உழைப்பு தேவையில்லை' என, திசை திருப்பிவிடுகின்றனர். சிறந்த சாய்ஸ்:இதனால், சராசரியாக படிக்கும் மாணவர், இன்ஜினியரிங் செல்ல வேண்டும் என, ஆசைப்படும் பட்சத்தில், அவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அடங்கிய குரூப் சிறந்த சாய்ஸாக உள்ளது. எம்.பி.பி.எஸ்., கிடைக்காவிட்டாலும், நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவத்துறை தான், என்னுடைய சாய்ஸ் எனக்கூறும் மாணவர்களுக்கு, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் அடங்கிய பியூர் சயின்ஸ் குரூப் கைக்கொடுக்கும்.
ஊரக பகுதிகளில், பியூர் சயின்ஸ் குரூப்பில் சேர, அதிக அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நகர்ப்புறங்களில், கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டு, உயிரியல், கணிதம் அடங்கிய குரூப்பில் சேர, ஆர்வம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment