ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ்மங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினிக்கு 2011-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அப்போது 180 நாட்கள் ஊதியத்துடன் கூடடிய விடுமுறை அவருக்கு கிடைத்தது. இதனை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருந்த பிரியதர்ஷினி கடந்த ஆண்டு 2-வது பிரசவத்திற்காக 179 நாட்கள் விடுமுறை எடுத்து தாம் பணிக்கு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இரட்டை குழந்தைகள் இருப்பதை மறைத்து விடுமுறை பெற்றதாகவும், அதனை ஊதியமில்லா விடுமுறையாக மாற்றி பள்ளி கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாகவும் ஆசிரியை தெரிவித்துள்ளார்.
இரண்டாவது பிரசவத்துக்கு விடுமுறை எடுக்க தமக்கு உரிமை உள்ளதால் விடுமுறை காலத்தில் பெற்ற ஊதியத்தை திரும்ப செலுத்துமாறு பள்ளி கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரியதர்ஷினி கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் முதல் பிரவசத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததை வைத்து 2-வது பிரசவத்துக்கு விடுமுறை தர மறுக்க முடியாது எனக் கூறினார்.
பெண் ஊழியர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்புக்காகவே மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். எனவே 2-வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி மகப்பேறு விடுமுறைக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பிடித்தம் செய்யும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஜுன் 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment