ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கீழ் இயங்கி வரும் 5 வங்கிகளின் மூலதனத்தை மத்திய அரசு பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வரும் 24ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் பிகேனர் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் வங்கிகள் இயங்கி வருகின்றன.
இதில் 40 ஆயிரம் அதிகாரிகளும், 25 ஆயிரம் ஊழியர்களும் பணிபுரிகின்றனர். இந்த வங்கிகளின் மூலதனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வசம் உள்ளதால், இதனை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கும் முயற்சிகளில் அதன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த 5 வங்கிகளின் மூலதனத்தை மத்திய அரசு பெற்று, 5 வங்கிகளையும் சுயமாக இயங்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதில் 25 பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் பிகேனர் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் வங்கிகள் தற்போது லாபகரமாக இயங்கி வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வர்த்தகத்தை பெருக்கும் நோக்கில், இந்த 5 வங்கிகளையும் அதனுடன் இணைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக டில்லியில் தலைமை தொழிலாளர் நல ஆணையருடன் 3 முறை நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி ஒருநாள் மட்டும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment