2015--16-ம் கல்வி ஆண்டிற்கான 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விபரங்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்து, 'ஜீரோ பேலன்ஸில் அவர்கள் வங்கி கணக்கு துவக்க பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர், மேல்நிலை பள்ளிகளில் 10, பிளஸ் 2-வில் பயிலும் மாணவர்கள், “இடை நிற்றலை நீக்கும்” பொருட்டு சிறப்பு ஊக்க தொகை வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை மாணவர்களின் விபரங்கள், வங்கி கணக்கு எண், ஆகியவை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் மாணவர்களின் விபரங்கள், வங்கி கணக்கு எண்களில் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கால தாமதமும் ஏற்பட்டு வந்தது.பிழைகள் மற்றும் கால தாமதத்தை களைய, சிறப்பு ஊக்கத்தொகை பெறும் மாணவர்களின் விபரங்களை, dse.ssasoft.in என்ற இணையதளத்தில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு' மூலம், நேரடியாக 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பணிகளை வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், மாணவர்கள் வங்கி கணக்கு ஆரம்பிக்கும்போது, கணக்கு துவங்க சம்பந்தப்பட்ட வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட, குறைந்த பட்ச தொகை கேட்கப்பட்டது. அதுமட்டுமன்றி, ஆறு மாதத்துக்கு மேல், எவ்வித பரிவர்த்தனையும் இல்லாமல் இருந்தால், வங்கிகள் அக்கணக்குகளை முடக்கி வைத்தன. இதனால், மாணவர்களுக்கு அனுப்பப்படும் தொகை சென்று சேருவதில் சிக்கல் இருந்தது. இதை களைய, அவர்களுக்கு 'ஜீரோ பேலன்ஸில்' வங்கி கணக்கு துவக்கி, வங்கிகளால் அக்கணக்குகள் முடக்கப்படாதவாறு, நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தர விட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment