பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்கும் என சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக்கல்லூரிகள், ஒரு தனியார் சட்டக்கல்லூரி மற்றும் சட்டப்பல்கலையில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளி ஆகிய 9 கல்லூரிகள் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் வருகிறது. இதில், 5 ஆண்டு பிஏஎல்எல்பி படிப்பின் கீழ் 1052 இடங்களும், 3 ஆண்டு எல்எல்பி படிப்பின் கீழ் 1262 இடங்களும், சீர்மிகு சட்டப்பள்ளியில் 660 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான 2015-16ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
அதன்படி, சட்டப்பல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள 5 ஆண்டு (ஹானர்ஸ்) பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறும். இந்த மாதம் 22ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும். அன்று மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 25ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல, சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு வரும் 8ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் தொடங்கி, இந்த மாதம் 29ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். அன்று மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் உள்ள 3 ஆண்டு படிப்புகளுக்கு (ஹானர்ஸ்) வரும் 5ம் தேதி (இன்று) விண்ணப்பம் விநியோகம் தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். அன்று மாலைக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். சட்டக்கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு சட்ட படிப்புகளுக்கு வரும் 12ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும். ஜூலை 17ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதே மாதம் 31ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்ட 10 நாட்களில் கவுன்சலிங் நடைபெறும். கட்டணம் எவ்வளவு? சட்டப்பல்கலையில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு நேரடியாக ரூ.1000மும் தபால் மூலம் பெறுவதற்கு ரூ.1,100ம் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு நேரடியாக பெறுவதற்கு ரூ.500ம், தபால் மூலம் பெறுவதற்கு ரூ.600ம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு பொது பிரிவினருக்கு நேரடியாக பெறுவதற்கு ரூ.500ம், தபால் மூலம் பெறுவதற்கு ரூ.600ம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு நேரடியாக பெறுவதற்கு ரூ.250ம், தபால் மூலம் பெறுவதற்கு ரூ.350ம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment