அரசு மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது. தமிழகத்தில் 52 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
இந்த ஆண்டு பள்ளித் திறக்கும் நாளன்றே பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்ததால், தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அந்தந்த பள்ளிகளில் தலைமையாசிரியரின் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் கடந்த மாதமே நடந்தது. ஆனால், எத்தனை மாணவர்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்ற முழு விவரங்களை பெரும்பாலான பள்ளிகள் தயார் செய்யாததால், பஸ் பாஸ் வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது.
பழைய பஸ் பாசுடன் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து வந்தால் பஸ்களில் அனுமதிக்கும்படி அரசு பேருந்து கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு முறையாக போய் சேராததால், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கண்டக்டர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நிலவியது. இந்நிலையில், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு 25 லட்சத்து 44 ஆயிரத்து 576 மாணவ, மாணவிகளுக்கு 17 மையங்கள் மூலம் பஸ் பாஸ் வழங்கும் பணி நடந்தது. இந்த ஆண்டு பள்ளி திறந்த உடனேயே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பெரும்பாலான பள்ளிகள், மாணவர்கள் பட்டியல் தயாரிப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றன. இதனால் திட்டமிட்டபடி பணிகள் துவங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இருந்தாலும், போக்குவரத்து துறையினருக்கு வந்துள்ள மாணவர்கள் பட்டியலின்படி, அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி நேற்று காலை முதல் துவங்கியது. இந்த ஆண்டு 5 மையங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 22 மையங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
No comments:
Post a Comment