நாடு முழுவதும் மாணவ, மாணவிகளிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் கோடை விடுமுறையில் ‘இளம் விஞ்ஞானி முகாமிற்கு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் 40 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி முதல்வர் ஜோசப் நிருபர்களிடம் கூறியதாவது
:இளம் வயதிலேயே அறிவியல் ஆற்றல் மிக்க மாணவர்களை இனம் காணும் வகையில் இந்த முகாம் நடக்கிறது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கான கோடை முகாம் மே 6ம் தேதி முதல் 26ம் தேதி வரை 20 நாள் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடக்கிறது. இதேபோல தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கான முகாம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடக்கிறது.
கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அரையாண்டுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு பள்ளியில் இருந்து இருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.இந்த கோடை பயிற்சி முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு அரசின் நிதி ஒதுக்கீட்டை பொறுத்து தொடர் பயிற்சிகளும் அளிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அந்தந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment