இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 15, 2013

கணிதத்தில் கடினமான வினாக்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸ்

  பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸாக வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கணிதத் தேர்வு ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்றது. மாதிரிக் கட்டமைப்புக்கு (புளூ பிரிண்ட்) மாறாக வினாத்தாள் அமைந்திருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் 5 மதிப்பெண்களுக்கான அணிகள் பகுதியில் (மேட்ரிக்ஸ்) வழக்கமாகக் கேட்கும் ஒரு வினாவுக்குப் பதிலாக 2 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இயற்கணிதப் பகுதியில் (அல்ஜிப்ரா) வழக்கமாக 3 வினாக்களுக்குப் பதிலாக 2 வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன.

இது தவிர, ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு விடை எழுத 5 நிமிஷங்கள் செலவழிக்க வேண்டியிருந்தது. மேலும் 5 மதிப்பெண் வினாக்களில் 2 வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் செலவழிக்கும் வகையில் கடினமாக இருந்தது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  இது குறித்த செய்தி தினமணியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியானது. எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மதிப்பெண்களை போனஸாக வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.  

அதன்படி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விடைக் குறிப்பாணையில் அணிகள், முக்கோணவியல் பாடப் பிரிவுகளில் ப்ளூ பிரிண்டுக்கு மாறாக கூடுதல் வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதால் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிரிவு 3-ல் உள்ள அனைத்து விடைகளையும் மதிóப்பீடு செய்து அதில் மிகக் குறைவான மதிப்பெண் பெற்ற இரண்டு விடைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்.  அதாவது ஒரு மாணவன் 0, 1, 2, 3, 4 என மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவருக்கு 5 மதிப்பெண் வழங்க வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் 10 மதிப்பெண்கள் போனஸாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அனைத்து விடைகளையும் மதிப்பீடு செய்து என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால், அந்தப் பிரிவில் உள்ள அனைத்து (9) விடைகளையும் எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட வேண்டுமா அல்லது ஓரிரு வினாக்களை எழுதியுள்ளவர்களுக்கும் வழங்கலாமா என்ற குழப்பம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியது:  

கணிதத் தேர்வுக்கான வினாத்தாளில் மறைமுகமான வகையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதுடன், ப்ளூ பிரிண்ட் படி கேள்விகள் கேட்கப்படாததால் கிராமப்புற மாணவர்கள் திணறும் நிலை குறித்த பரவலான கருத்து வெளிப்பட்டது. இந்நிலையில், தேர்வுகள் இயக்ககம் தவறைச் சரி செய்யும் வகையில் 10 மதிப்பெண்கள் கிடைக்க வழிவகை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் கணிதத்தில் நூறு மதிப்பெண் பெறுவது அதிகரிப்பதுடன், கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கணிசமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment