அடிப்படை வசதிகள் இல்லாத 1000 தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்திருக்க வேண்டும்.
அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் பள்ளிக்கு குறைந்தபட்சம் 6 கிரவுண்டு நிலமும், நகராட்சி பகுதிகளில் 8 கிரவுண்டு நிலமும், மாவட்ட தலைநகரங்களில் 10 கிரவுண்டு நிலமும், பேரூராட்சி பகுதிகளில் 1 ஏக்கர் நிலமும், கிராம ஊராட்சிகளில் 3 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். இதுதவிர, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறைகளிடம் இருந்து தடையின்மை சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகிய வசதிகளும் இருக்க வேண்டும்.
இந்த விதிகளுக்கு உட்படாத பள்ளிகளுக்கு தொடர் அங்கிகாரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளின் இடப்பரப்பளவு, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேவராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, முழுமையாக ஆய்வு நடத்தி 3 மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment