் "தினத்தந்தி' நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் (76) சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாலையில் அவரது உயிர் பிரிந்தது.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன் 27.9.1936 அன்று பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்த அவர், ஆதித்தனார் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். தந்தி டி.வி. தொலைக்காட்சி நிறுவனத்தையும், ஹலோ எப்.எம். வானொலியையும் அவர் நிர்வகித்து வந்தார். ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரி உள்பட பல கல்லூரிகளை நடத்தி வந்தார்.
பத்திரிகைத் துறை, கல்வித் துறை மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் சிவந்தி ஆதித்தன் சிறந்து விளங்கினார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார். வாலிபால் விளையாட்டுக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி சர்வதேச வாலிபால் சம்மேளனம் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெüரவித்துள்ளது. மத்திய அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை சிறப்பித்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment