அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய மாணவர்களுக்கு அடுத்த மாதமும் பழைய மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதலும் 'பஸ் பாஸ்' வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கி உள்ளன. ஆனால் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் அட்டை இன்னும் வழங்கவில்லை. இதனால் பஸ்களில் மாணவ மாணவியர் கட்டணம் இல்லாமல் பயணிப்பது சவாலாக உள்ளது. 'பல பஸ்களில் நடத்துனர்கள் பாஸ் காட்ட வேண்டும்;
இல்லையென்றால் டிக்கெட் எடுக்க வேண்டும்' என வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்து உள்ளன.ஆனால் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பஸ் பாஸ் பெறுவதற்கான பணிகளில் கல்வித் துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.'மாணவர் விவரங்களை அளித்தால் மட்டுமே பஸ் பாஸ் அட்டை தயாரித்துத் தர முடியும்' என போக்கு வரத்துத் துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளி இயக்குனரகத்தில் இருந்து நேற்று புதிய உத்தரவு வந்துள்ளது. இதன்படி ஏற்கனவே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பழைய மாணவர்கள் பஸ் பாஸ் வைத்திருந்தால் அந்த பட்டியலில் பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள் முகவரி மாற்றம் மற்றும் பஸ் தடம் எண் மாற்றம் குறித்து தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.
இந்த பட்டியலை வரும் 9ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.பின் இந்த விவரங்களை தாமதிக்காமல் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் கொடுத்து ஒரு வாரத்திற்குள் பாஸ் அட்டை வாங்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதே போல் புதிதாக பல்வேறு வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களின் பட்டியலை தனியாகத் தயாரித்து இம்மாத இறுதிக்குள் போக்குவரத்துத் துறையில் கொடுக்க வேண்டும்.அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் அவர்களுக்கும் பஸ் பாஸ் அட்டை வாங்கித் தர வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்
.இதன்மூலம் புதிய மாணவர்களுக்கு அடுத்த மாதமும் பழைய மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதலும் பஸ் பாஸ் கிடைக்கும் என தெரியவந்து உள்ளது.
No comments:
Post a Comment