மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3,344 ஆசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதில், 2,566 இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள், 391 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 387 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அடங்கும்.
மூவகைப் பணிகள்
இடைநிலை ஆசிரியர் பணியைப் பொறுத்தவரையில், ஆசிரியர் பயிற்சியில் பட்டயப் படிப்புடன் “சி-டெட்” எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும். இதேபோல், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இளங்கலை படிப்பு மற்றும் பி.எட். முடித்திருப்பதுடன் சி-டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம். வயது வரம்பு 35-க்குள். “முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 40-க்குள்”.
கடைசித் தேதி
அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதியுள்ள நபர்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாகத் தேர்வுசெய்யப்படுவார்கள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் ஜூன் 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பு அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சி-டெட் தேர்வில் குறைந்தபட்சம் 82 மதிப்பெண் பெற்ற எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். பாடவாரியான காலியிடங்கள், தேர்வு முறை, பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தின் அடியில் ‘எம்ப்ளாய்மென்ட் நோட்டீஸ்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிக்குள் சென்று விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment