சென்னையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது:
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள், குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளியில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
நடப்புக் கல்வியாண்டில் (2013-14) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
தமிழக அரசால் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதோடு, பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.
அனைத்து அரசுப் பள்ளிகளும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் முகமது அஸ்லாம், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் சரவணவேல், பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment