நீதிபதி சிங்காரவேலு கமிட்டி தமிழ்நாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அளவுக்கு அதிகமாக கல்வி கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. தமிழக அரசு அமைத்த இந்த கமிட்டி 2013–2016–ம் ஆண்டுக்கு தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிப்பதற்காக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தது.
இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கமிட்டியின் அலுவலகத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, ஆசிரியர்–ஊழியர் சம்பவம் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. 8,226 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 8,226 தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்குமான கல்வி கட்டணத்தை மாவட்ட வாரியாக இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை மாணவர்கள்–பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி கட்டண நிர்ணய கமிட்டியின் தலைவரான நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு நிருபர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment