பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 17), செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஆகிய கிழமைகளில் ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள மையங்களில், தங்களது விண்ணப்ப எண்ணை தெரிவித்து மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணாசாலையில் உள்ள மதரசா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். புகைப்படத்துடன் கூடிய இந்த ஹால் டிக்கொட்டில் பதிவு எண், தேர்வு மையம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை ஒரு நகலெடுத்து மாணவர்கள் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். திருவள்ளூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி. ஹிந்து மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னேரி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டர்சன் மேல்நிலைப் பல்ளியிலும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு செங்கல்பட்டு செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment