‘நெட்’ தகுதித்தேர்வு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்தும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால், யு.ஜி.சி. நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். நெட் தகுதித்தேர்வை யு.ஜி.சி. ஆண்டுக்கு இரண்டு தடவை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான முதல் நெட் தேர்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான முதுநிலை பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். சென்னையில் 13 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட முக்கிய பெரு நகரங்களில் நெட் தேர்வு நடந்தது. சென்னையில் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி உள்பட 11 மையங்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். காலையில் 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் கொள்குறிவகையில் (ஆப்ஜெக்டிவ் முறை) 3 தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு முடிவுகள் விரைவில் யு.ஜி.சி.யின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment