பிளஸ்-2 வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மெட்ரிக் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 4 பிரிவுகள் இருக்க வேண்டும். 5வது பிரிவை வைக்க வேண்டுமானால் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு மேல் எக்காரணம் கொண்டும் பிரிவுகள் கூடுதலாக இருக்கக்கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பள்ளிகளில் ஆய்வு நடத்தி இந்த உத்தரவை அமல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்திலுள்ள பல பள்ளிகள், இதனை ஏற்று அதிகமாக இருந்த பிரிவுகளை குறைத்து விட்டனர். ஆனால், குறைத்த பிரிவுகளில் படித்த மாணவர்களை, மற்ற பிரிவுகளில் சேர்த்து கல்வி கற்று கொடுத்து வருகின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆசிரியர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, ஒரு பிரிவில் 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதியையும் தற்போது அமல்படுத்தி உள்ளனர். கல்வி உரிமைச் சட்டப்படி, தொடக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவில் 30 மாணவர்களும், நடுநிலைப்பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவுக்கு 35 மாணவர்களையும் வைத்துக் கொள்ளலாம். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் கல்வி உரிமைச் சட்டத்தில் வராது.
இருந்தாலும்கூட ஏற்கனவே ஒரு பிரிவுக்கு 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தது. அதனை தற்போது கல்வித்துறை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளனர். பல பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் 10 பிரிவுகள் வரை வைத்து நடத்தினர். தற்போது பிரிவுகள் குறைக்கப்பட்டதால், அதிகமான மாணவர்களை சிறிய இடத்தில் அடைத்து வைத்து பாடம் கற்று கொடுக்கின்றனர். இதனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பிரச்னை ஏற்படுகின்றன. ஆசிரியர்களால் ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக கவனிக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதனைத் தடுக்கவே, ஒரு பிரிவிற்கு 50 மாணவர்கள் என்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment