பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு தானியங்கள் அடங்கிய நொறுக்குத் தீனிகள் வழங்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி அறிவித்தார். தினமும் வழங்கப்படும் இந்த நொறுக்குத் தீனிகளில் லட்டு, அல்வா மற்றும் கார வகைகள் இடம்பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இத் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
சட்டப் பேரவையில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் பா.வளர்மதி வெளியிட்ட அறிவிப்புகள்: பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டையும், புரதச் சத்தினை அதிகரிக்க கொண்டைக்கடலை, பாசிப்பயறு சுண்டல் ஆகியன வாரத்துக்கு இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றைவிட சிறு தானியங்களில் தாதுச்சத்துகள் மிக அதிகமாக உள்ளன. எனவே, ஒரு முன்னோடித் திட்டமாக ஊட்டச்சத்து பற்றாக்குறை சதவீதம் அதிகமுள்ள அரியலூர் மாவட்டத்தில் சிறு தானியங்களின் கலோரி மதிப்புக் குறையாமல் குழந்தைகள் விரும்பும் வகையில் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் 50 கிராம் அளவில் சுவையான லட்டு, அல்வா மற்றும் கார வகைகள் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்துக்கு ரூ.1.29 கோடி நிதி ஒதுக்கப்படும். சேவை இல்லங்கள்: தமிழகத்தில் அதிக அளவில் பெண்கள் பயனடையும் வகையில் சேவை இல்லங்களை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.1.38 கோடியில் புதிதாக இரண்டு சேவை இல்லங்கள் தொடங்கப்படும். அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதுடன், அவர்களின் மனம், உடல் மற்றும் சமூக ரீதியான வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்படுகிறது. குழந்தைகள் தன் சுத்தம் பேணி, சுகாதார நிலையை மேம்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. அதன்படி, 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் தன் சுத்தம் பேண சுகாதாரப் பைகள் ரூ.2.72 கோடி செலவில் வழங்கப்படும்.
No comments:
Post a Comment