பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்பில் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்பு திறனை ஏற்படுத்த பள்ளி அளவில் புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் பள்ளிகளுக்கே நேரில் செல்லும் வகையில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
*இந்த நடமாடும் புத்தக கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் கூட்டு முயற்சியில் நடக்கும்.
* பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் புத்தக கண்காட்சியை அவர்கள் சொந்த வாகனங்களில் வைத்தோ அல்லது பள்ளியில் ஏதாவது வசதியான இடத்தில் வைத்தோ நடத்தலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து கொடுப்பார்கள்.
* இது தொடர்பான விளம்பரங்களை பதிப்பாளர்களே செய்து கொள்ள வேண்டும்.
* புத்தக கண்காட்சிக்கு கட்டணம் வசூலிக்க கூடாது.
* மாணவர்களின் அறிவு வளர்ச்சி, சிந்தனைத்திறன், மொழிவளம், படைப்பாற்றல், அறிவியல் நோக்கு, கலை அறிவு, சுயமுன்னேற்றம், வாழ்க்கைத் திறன், நாட்டுப்பற்று போன்றவற்றை ஊக்குவிக்கும் நூல்களை இடம் பெறச் செய்ய வேண்டும்.
* விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்க வேண்டும்.
* தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் விரும்பினால் இந்த நடமாடும் புத்தக கண்காட்சியில் பள்ளிக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். பதிப்பாளர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு புத்தகங்களை நன்கொடையாகவும் வழங்கலாம்.
* இந்த விதிகளுக்கு உட்பட்டு பங்கேற்க விரும்பும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தங்கள் விருப்பத்தையும் பங்கேற்க விரும்பும் மாவட்டம், உள்ளிட்ட விவரங்களை இயக்குநர், தொடக்க கல்வி இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அல்லது deechennai@gmail.com என்ற மின்முகவரியில் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment