சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கும் பணி நடப்பதை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டு பேசியதாவது: சட்டப் பேரவையில் நடந்த மானியக் கோரிக்ைககள் மீதான விவாதங்களின் போது நடப்பு 2017-18ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழல் உருவாவதற்காக கனவு ஆசிரியர் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு 192 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விருதுகளை பெறுவதற்கான தகுதிகள் குறித்த பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு 192 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த விருதுக்காக ஆண்டுக்கு ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டம் பிளஸ் 1 வகுப்புக்கு இந்த பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் மாற்றம் வருவதால் ஆசிரியர்கள், பாடத்திட்டத்துடன் நற்பண்புகளை இணைத்து கற்பித்தலும் கற்றலும் என்ற அடிப்படையில் value integrated teaching and learning என்ற தலைப்பில் பயிற்சி கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி ைகயேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். புதிய பாடத்திட்டம் எழுதும் பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்கான புதிய புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்தில் நடந்த குளறுபடிகள் மீது விசாரணை நடந்து வருகிறது. அது முடிவுக்கு வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.
No comments:
Post a Comment