பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் 960 பேருக்கு ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
32 மாவட்டங்களில் மேற்கண்ட வகுப்புகளில் இருந்து தலா 15 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் ரூ.1 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுதோறும் இதற்காக செலவு செய்ய இருக்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் இந்த பரிசுத் தொகையை வழங்க இருக்கிறோம். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் அயல் நாடுகளுக்கு கல்விப் பயணம் அழைத்து செல்லப்படுவார்கள்.
நீட் தேர்வுக்காக 100 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் 4 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க 75 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர் பணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் 2012ல் கொண்டு வரப்பட்டது. அதில் சில குறைகள் உள்ளதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். அதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம். விரிவுரையாளர் தேர்வு செய்வதில் ஒரு சிறிய குறைபாடு உள்ளது.
ஓஎம்ஆர் தாள்களை எல்காட் நிறுவனம்தான் திருத்துகிறது. அதன் காப்பி எங்களிடம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீட் பயிற்சி மையங்களுக்கு செல்லும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த ஆண்டு லேப்டாப் வழங்க டெண்டர் விட்டபோது வழக்கு போட்டனர். அந்த வழக்கு முடிந்த பிறகு எல்காட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் தாமதம் ஏதும் ஏற்படாத வகையில் முன்னதாகவே கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment