பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்கள் பங்கேற்பதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலமாக டிசம்பர் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய டிசம்பர் 29 கடைசி நாளாகும்.
நேரடி தனித் தேர்வர்கள்: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1-இல் மொழிப் பாடத்தில் தமிழ் மொழிப் பாடத்தை முதல் மொழிப் பாடமாக தேர்வெழுதுவது கட்டாயம். மேலும், இவர்கள் 1-3-2018 அன்று பதினான்கரை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு ஏற்கெனவே பதிவு செய்து, பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே, பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள்... ஏற்கெனவே பத்தாம் வகுப்பு பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், தோல்வியடைந்த பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத் திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தைப் பொருத்தவரை, செய்முறைத் தேர்வுக்குப் பின்னரே, எழுத்துத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். எனவே, ஏற்கெனவே அறிவியல் பயிற்சி வகுப்பில் சேர்ந்திருத்தல் வேண்டும். இல்லையெனில், இப்போது வழங்கப்படும் சலுகையைப் பயன்படுத்தி, அறிவியல் செய்முறை வகுப்பில் பதிவு செய்யவேண்டும். தேர்வுக் கட்டணம்: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 125 மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 என மொத்தம் ரூ. 175 கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.
பார்வையற்றவர்கள், காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாய்ப்பு: இயக்குநர் அலுவலகத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித் தேர்வர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, தனித் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரூ. 125 கட்டணம் செலுத்தி, செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து டிசம்பர் 22 முதல் 29 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment