கற்பித்தல் முதல் கட்டமைப்பு வரை, சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப்பள்ளி', விருது வழங்க, திருப்பூர் மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், நடப்பாண்டில், 'புதுமைப்பள்ளி' விருது வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர் எண்ணிக்கையை ஆண்டுதோறும் அதிகரிப்பது, கற்பித்தலில் புதுமை, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வது என சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப் பள்ளி', விருது வழங்கப்படுகிறது.
ஆய்வுப்பணிகள் துவக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும், துவக்கம் முதல் மேல்நிலை வரை, நான்கு நிலைகளிலும் தலா ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்படுகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு, தலா ஒரு லட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு, தலா நான்கு லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.மாநில அளவில் ஒரு குழுவும், மாவட்ட அளவில் ஒரு குழுவும், பள்ளிகளை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக்கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வியாளர்களை உறுப்பினர்களாகக்கொண்ட குழு, அமைக்கப்படுகிறது.
மாநில அளவிலான குழுவிற்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், தொடக்கக்கல்வி இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலை) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினர், பள்ளியின் கட்டமைப்பு, செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை, அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், புதுமைப்பள்ளி தேர்வுக்கான ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளன.தேர்ந்தெடுப்பது எப்படி?புதுமைப்பள்ளி விருதுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு நிலையிலும், தலா மூன்று பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட ஆய்வுக்குழுவினர், மாநில கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். மாநில ஆய்வு குழுவினர், அதில் ஒரு மாவட்டத்துக்கு, ஒவ்வொரு நிலையிலும் சிறந்த ஒரு பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர்.
புதுமைப்பள்ளி விருதாக பெறும் பரிசுத்தொகையை, பள்ளிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறைகளை மேம்படுத்தி நவீனப்படுத்துதல், வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், ஆங்கில வாசிப்பு பயிற்சி, யோகா பயிற்சி வழங்குதல், கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்குதல், பள்ளி நுாலகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி பட்டியல் தயாரிப்பு கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறப்பாக செயல்படும் பள்ளிகளை, அவ்வப்போது பட்டியல் எடுத்து வருகிறோம். மேலும், அடிப்படை வசதிகள் முதல், மாணவர் சேர்க்கை வரை, உள்ள பள்ளிகளையும் கண்காணித்து வருகிறோம். அரசுப்பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தவே, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு உரிய பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் தயாரித்துள்ளோம். இதைத்தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment