தமிழகத்தில் வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (ஜன.2) முதல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கடந்த டிச.22}ஆம் தேதி முதல் டிச.29}ஆம் தேதி வரையிலான நாள்களுக்குள் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. இந்த நாள்களில் விண்ணப்பிக்கத் தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கல்) கீழ் ஜன.2}ஆம் தேதி முதல் ஜன.4}ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எங்கு விண்ணப்பிப்பது? மாணவர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள மையங்கள் வழியாக விண்ணப்பிக்கக் கூடாது. சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும், அனைத்து முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம். அறிவியல் பாடத்துக்கான செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள், புதிய பாடத்தில் தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தைத் தவிர பிற பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் எவ்வளவு? தேர்வுக்கட்டணம் ரூ.125; சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500; இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675}ஐ ரொக்கமாக சேவை மையங்களில் செலுத்தி, ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீதில் உள்ள எண்ணைக் கொண்டே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய விவரம் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும்.
No comments:
Post a Comment