தமிழகத்தில் டெட் (டி.இ.டி) தேர்வு மூலம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த தேர்வு கடந்த 2012ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளின் வினாத்தாள் 1 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி பாடத்திட்ட புத்தகங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கணிதம், அறிவியல் என குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்து, அந்த பாட ஆசிரியராக செல்வார்கள்.
அவ்வாறு செல்லும் அவர்கள், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தாமல், கற்பித்தலில் ஆர்வம் குறைவாகவே இருக்கும். இதனால் மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர். எனவே இவற்றை தடுக்க டெட் தேர்வில் மாற்றம் கொண்டுவர பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஆசிரியர் தகுதித்தேர்வில் மேற்கண்ட அம்சங்கள் தவிர வகுப்பறைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை, ஒவ்வொரு மாணவனுக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகள், அவற்றை புரிந்து கொண்டு அவனிடம் ஆசிரியர் அணுகும் முறை, கற்பித்தல் மற்றும் மாணவனின் கற்றல் திறனை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
இதனை அப்படியே தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் முனைப்புகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக தமிழக கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்களுடன் கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில் திரட்டப்படும் தகவல்களுடன் ஆந்திராவில் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் தமிழக டெட் தேர்வில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment